Home உலகம் மேற்கத்திய நாடுகளின் தடைகள் முட்டாள்தனமானது – விளாடிமிர் புடின்!

மேற்கத்திய நாடுகளின் தடைகள் முட்டாள்தனமானது – விளாடிமிர் புடின்!

532
0
SHARE
Ad

Putinமாஸ்கோ, அக்டோபர் 4 – மேற்கத்திய நாடுகளின் முட்டாள் தனமான பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், உக்ரைனில் ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மாஸ் விமானம் எம்எச்-17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து,

ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்தன. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதியாகும் உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

மேற்கத்திய நாடுகளின் தடைகளால், ரஷ்யாவின் பொருளாதாரம் சிதைந்து வருவதாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமடைந்து  வருகின்றனர்.

இதனை போக்கும் விதமாக, ரஷ்யா மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொண்டு தனது கருத்தினை பதிவு செய்தார்.

மேற்கத்திய நாடுகள் தொடர்பாக அவர் கூறியதாவது:- “ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகள், உலக பொருளாதாரத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீறும் வகையில் உள்ளன. அவர்களின் எண்ணத்தை முறியடிக்கும் விதமாக, ரஷ்யாவின் பொருளாதாரத்தை பல்வேறு வகையில் வலுவாக்கி வருகின்றோம்.”

“மேற்கத்திய நாடுகளின் முட்டாள்தனமான தடைகள், நமது பொருளாதார வளர்ச்சியை, வணிக போட்டியை, வேலைதிறனை பாதிக்காது. ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்ததன் மூலம், உலக பொருளாதாரத்தை அவர்கள் சிதைத்து விட்டனர்” என்று அவர் கூறியுள்ளார்.

புடினின் பேச்சு, முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் பாராட்டு தெரிவிக்கின்றன.