பாட்னா, அக்டோபர் 4 – பீகாரில் தசரா விழா நெரிசலில் சிக்கி 32 பேர் பலியானார்கள். தசரா பண்டிகையை முன்னிட்டு, ‘ராவண வதம்’ என்ற பெயரில், ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி, நேற்று வட மாநிலங்களில் நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே மேடையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து இருந்தனர். முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியும் கலந்து கொண்டு பார்த்தார்.
மைதானத்தில், ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் ஆகியோரின் 60 அடி உயர பிரமாண்ட உருவ பொம்மைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அம்பு எய்தி, அந்த உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
நிகழ்ச்சி முடிவடைந்து, காந்தி மைதானத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறத் தொடங்கினர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் வெளியேறியதால் நெரிசலில் சிக்கி பலரும் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி மிதித்துச் 32 பேர் பலியானார்கள். இவர்களில் 6 பேர் குழந்தைகள்.
இன்னும் 50 பேர் படுகாயத்துடன் பாட்னா மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவித்தனர். 32 பேர் பலியான தகவலை மாநில உள்துறை செயலாளர் அமிர் சுபானி உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே, இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்தார். பலியானோரின் குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அவர் வற்புறுத்தினார்.