வாஷிங்டன்,அக்டோபர் 4 – இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறப்பட்ட விவகாரத்தில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தது.
இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு அமெரிக்கா, இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது, அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறியுள்ளதாவது:- “ராஜபக்சேயுடனான சந்திப்பின் போது இலங்கை மீதான அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை ஜான் கெர்ரி விளக்கியுள்ளார். இலங்கையுடனான நட்புறவை அமெரிக்கா அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறது.
எனினும், அந்த விருப்பம் நிறைவேற வேண்டுமானால் இலங்கை அந்நாட்டில் உள்ள அனைத்து மொழி, இன, மதத்தினருக்கும் அமைதியும், வளமும் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.