Home கலை உலகம் திரைவிமர்சனம் : “பூஜை” – இடைவேளை வரை மங்கலம்! பின்பாதி அமங்கலம்!

திரைவிமர்சனம் : “பூஜை” – இடைவேளை வரை மங்கலம்! பின்பாதி அமங்கலம்!

1087
0
SHARE
Ad

poojai movieகோலாலம்பூர், அக்டோபர் 22 – அதகளப்படுத்தும் சண்டைக் காட்சிகள் – படம் முழுக்க பல கதாபாத்திரங்களின் கரங்களில் அரிவாள், கத்திகள் – மரங்களிலும் மற்ற வாகனங்கள் மீதும் மோதிக் கொள்ளும் கார் விரட்டும் காட்சிகள் – பிரபலமான சுமார் 10 நட்சத்திரங்கள் ஒன்றாக இருப்பது போல் பெரிய குடும்பம் – அதற்கேற்றாற்போல் பெரிய வீடு – விறுவிறுவென்ற திரைக்கதை – நமது கண்களுக்கும், தலைக்கும் மயக்கம் வரும் அளவுக்கு சுழன்றடிக்கும் ஒளிப்பதிவுக் கோணங்கள் – சில வினாடிகளுக்கு ஒருமுறை வெட்டுப்படும் படத் தொகுப்பு –

இப்படி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தருவதுதான் இயக்குநர் ஹரியின் முத்திரை பாணி.

பூஜையிலும் தனது முத்திரையைத் தொடர்ந்திருக்கின்றார். ஆனால், முதல் பாதியில் தனது பாணி அம்சங்களை நன்றாகக் கலவை செய்து இடைவேளை வரை தந்து, இரசிகர்களைத் திருப்திப்படுத்தியவர், பின் பாதியில் சொதப்பிவிட்டார்.

#TamilSchoolmychoice

ஒரு சண்டைக் காட்சியில் பத்து பேரை அடித்தால் ஏதோ ஒப்புக் கொள்ளலாம். ஆனால், விஷால் நான்கைந்து சண்டைகளில், ஒவ்வொன்றிலும் பத்து பேரை அடித்துச் சாய்ப்பது என்பது அதிகப்படியான வெறுப்பைத் தருகின்றது.

அதிலும் அடிப்பதற்காக விஷாலும் பறந்து பறந்து தாக்குகின்றார் – அடிபட்டவர்களும் பறந்து பறந்து விழுகின்றார்கள். தாங்க முடியவில்லை!

சரி கோயம்புத்தூர் பக்கம்தான் இவர் அடிக்கு பத்து பேர் விழுவார்கள் என்று பார்த்தால், இங்கிருந்து பீகார் மாநிலத்தின் பாட்னா நகருக்குள் சென்று அங்கேயும் கொலைகார பீகாரிகள் கூட்டத்திற்குள் நுழைந்து தலைவன் முதல் அவன் அடிவருடிகள் முதல் அத்தனை பேரையும் ஒற்றை ஆளாகச் சாய்க்கின்றார்.

இந்த சண்டைக் காட்சிகளாலும், இடைவேளைக்குப் பின் ஏற்படும் திரைக்கதைத் தொய்வுகளாலும், படமும் இரசிகர்களின் மனதில் இருந்து சரிந்து விழுந்து விட்டது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் வெளியாவதால், பின்பாதியை தெலுங்கு இரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு ஹரி திரைக்கதையை அமைத்திருப்பார் போலும்!

கதை

பணத்துக்காக யாரையும் கொலை செய்யும் கூலிப் பட்டாளத்தையும், அதன் பின்னணியில் இயங்கும் தலைவனாக வட நாட்டு வில்லன் நடிகர் முகேஷ் திவாரியையும் மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கின்றது, ‘பூஜை’ திரைக்கதை.

poojai-first-look

கோயம்புத்தூர் பக்கம், சந்தையில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஆளாக விஷால் அறிமுகம். வழக்கம்போல், வில்லன் கோஷ்டிகளோடு மோதலில் தொடங்குகின்றது படம்.

விஷாலுக்கு அல்லக்கைகளாக வழக்கம் போல் சூரியுடன் சேர்ந்து நகைச்சுவை நடிகர்கள் பட்டாளம்.

அழகான பணக்கார கதாநாயகி சுருதிஹாசன்-விஷால் சந்திப்பு ஒரு பெரிய பேரங்காடியில் நிகழ்கின்றது. அடுத்தடுத்து அவர்களுக்குள் நிகழும் சந்திப்புக்களைத் தொடர்ந்து சுருதியிடம் தனது காதலைச் சொல்கின்றார் விஷால்.

“உனக்கு என்ன தகுதி இருக்கின்றது, என்னைத் திருமணம் செய்ய?” எனக்கூறி அந்தக் காதலைப் புறக்கணிக்கின்றார் சுருதி.

அதன்பின்னர் விஷாலின் பின்புலம் காட்டப்படுகின்றது – கோவையிலேயே பெரிய பணக்காரக் குடும்பம் ஒன்றிற்கு அவர்தான் வாரிசாம்! ஒரு குடும்பப் பிரச்சனையால், தாயின் கட்டளையால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கிறாராம்!

இதற்கிடையில், காவல் துறையின் உயர் அதிகாரி சத்யராஜை கொலை செய்ய முற்படும் வில்லனின் கூலிப் பட்டாளத்தோடு எதேச்சையாக மோதி சத்யராஜைக் காப்பாற்றும் விஷாலுக்கும் வில்லன் முகேஷ் திவாரியின் கும்பலுக்கும் பகைமை ஏற்படுகின்றது.

ஆனால், விஷாலுக்கும் வில்லன் முகேஷூக்கும் ஒருவரை ஒருவர் முகம் தெரியாது.

அதே சமயத்தில், விஷாலின் சொந்த கிராமத்தில் இருக்கும் அவர்களின் குலதெய்வக் கோயிலுக்கும் இதே முகேஷ்தான் அறங்காவலராக இருந்து அட்டூழியங்கள் செய்கின்றார்.

முகேஷ் நேரடியாக விஷாலின் குடும்பத்தினர்களைத் தாக்கவும், இடையூறு செய்யவும் முற்பட, அந்த கட்டத்தில் விஷாலின் அம்மா ராதிகாவுக்கும் விஷாலின் நல்ல குணம் தெரிய வர, பிரச்சனையைச் சமாளிக்க கிராமத்து வீட்டிற்கு விஷாலை வரச் சொல்கின்றார் ராதிகா.

குடும்பத்தினர் எல்லாரும் தங்களின் நிலத்தை கோயிலுக்கு தானம் செய்யவும், குலதெய்வப் பூஜையில் கலந்து கொள்ளவும் கிராமத்து வீட்டில் ஒன்று கூட, விஷாலும் அங்கு வந்து சேர்ந்து கொள்ள –

இதற்கிடையில் மனம் மாறி விஷாலைக் காதலிக்கத் தொடங்கும் சுருதியும் வில்லன் கோஷ்டி பிரச்சனையால் குடும்பத்தோடு, விஷால் குடும்பத்தினரோடு வந்து இணைந்து கொள்ள – அப்போதுதான் வில்லனுக்கும் விஷாலுக்கும் ஒருவருக்கொருவர் யார் என்பது தெரிய வருகின்றது.

அதன் பின்னர் இருவருக்கும் இடையிலான மோதல்களால் என்ன நடக்கின்றது என்பதுதான் இடைவேளைக்குப் பின் தொடரும் மீதிக் கதை.

பலமும் சுவாரசியங்களும்

விறுவிறுவென்ற திரைக்கதையும், ஆங்காங்கே அவர் வைக்கும் மர்ம முடிச்சுகளும்தான் தான், இயக்குநர் ஹரி படங்களின் மிகப் பெரிய பலம். இதிலும் அந்த விஷயத்தில் சாதித்துக் காட்டியிருக்கின்றார்.

ராதிகாவுக்கும் விஷாலுக்கும் என்ன சம்பந்தம் என்பதில் தொடங்கி, வில்லனின் கட்டம் போட்டு ஆளை முடிக்கும் திட்டங்கள் வரை, சஸ்பென்சாக சொல்லி இருக்கின்றார்.

விஷாலுக்கும் வில்லன் முகேஷூக்கும் இடையில் தெருவில் நடக்கும் சண்டையை வீடியோ எடுத்து சுருதி,  நட்பு ஊடகம் ஃபேஸ் புக்கில் பதிவேற்றம் செய்ய, அதை நான்கு இலட்சம் பேர் பார்த்தார்கள்  எண்பதாயிரம் பேர் ‘லைக்’ செய்தார்கள் என்பது திரைக்கதையில் நவீன தொழில் நுட்பத்தை சாமர்த்தியமாக இணைத்திருக்கும் முயற்சி.

அந்த காணொளியை (வீடியோ) பார்த்துவிட்டு, பின்பாதியில் பீகாரிலிருந்து வரும் இளைஞன், விஷாலைத் தேடி வருகின்றானா அல்லது வில்லனைத் தேடி வருகின்றானா என்றொரு முடிச்சை வைத்திருப்பது படத்தின் சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளது.

படத்தின் பெரும்பலம் சூரியின் நகைச்சுவைதான். மனுஷன் புகுந்து விளையாடியிருக்கின்றார். அவருக்குப் பக்கபலமாக இமான் அண்ணாச்சியும், வளர்ந்து வரும் இளம் நகைச்சுவை நடிகர் பாண்டியும் நன்றாக ஈடு கொடுக்கின்றார்கள்.

சூரியின் நகைச்சுவைக்காக மட்டும் படத்தை ஒருமுறை பார்த்து இரசிக்கலாம் என்று கூறும் வண்ணம் பிரமாதப்படுத்தியிருக்கின்றார். இனி சந்தானத்துக்கு சரியான போட்டி!

ஒரே ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி உடையோடு வரும் அண்ட்ரியாவின் நடனம் கண்ணுக்கு குளிர்ச்சி.

வி.டி.விஜயனின் படத் தொகுப்பு விறுவிறுப்பாக இருந்தாலும் சில சமயங்களில் நமக்கே தலைசுற்றல் வருவது போல், காட்சிகளை சுழட்டியடிப்பதும், கதாபாத்திரங்களை தேவையில்லாமல் தலைகீழாகக் காட்டுவதும் எரிச்சலைத் தருகின்றது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் பிரதாப் போத்தனையும் ராதிகாவையும் ஒரே படத்துக்குள் கொண்டு வந்தது – அதுவும் ஒரே வீட்டுக்குள் இருப்பது போல் கொண்டு வந்தது – ஹரியின் சாமர்த்தியம்தான் (பிரதாப் போத்தன் ராதிகாவின் முதல் கணவர்). ஆனால்,இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதுபோல் காட்சிகள் இல்லை.

பலவீனங்களும், குறைகளும்

சண்டைக்காட்சிகளாலேயே இடைவேளைக்குப் பின்னர் படத்தை நகர்த்த முற்பட்டிருப்பது படத்தின் மிகப் பெரிய பலவீனம்.

இதற்கு முன்னர் இதே விஷால் ‘பாண்டிய நாடு’ என்ற பெயரில் சண்டையே போடாமல், இறுதிச் சண்டையையும் காமா சோமா என்று போட்டு, வலுவான கதை, திரைக்கதையால் மட்டும் அதனை வெற்றிப் படமாக்கியதை அதற்குள் ஏன் மறந்தாரோ தெரியவில்லை.

ஹரிக்கும் விஷால் அதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்தியிருக்கலாம்!

அதிலும் இங்கிருந்து பீகாரின் பாட்னா சென்று அங்கு கொலைகாரக் கும்பலின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து (உண்மையிலேயே பழைய கோட்டையைத்தான் பாட்னா வில்லன்களின் கூடாரமாகக் காட்டுகின்றார்கள்) அரிவாள், துப்பாக்கி கொண்ட இருபது பேர் கும்பலோடு மோதி அனைவரையும் விஷால் ஒற்றை ஆளாய் சமாளிப்பது, தாங்க முடியலடா சாமி! திகட்டி விட்டது!

மொட்டைத் தலையுடன் கம்பீரமான காவல் துறை அதிகாரியாக வரும் சத்யராஜை சரியாகப் பயன்படுத்தவில்லை. அவருக்கேற்ற தீனி கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள்.

ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், மனைவியோடு திரையரங்குக்கு படம் பார்க்க வந்து ஒரே அடியில் மயக்கமாகி விழுந்து கிடக்கின்றார் சத்யராஜ். சாதாரண பொதுமக்களில் ஒருவரான விஷால் கத்தி, அரிவாளோடு வரும் பத்து பேரோடு சண்டை போட்டு சத்யராஜைக் காப்பாற்றுகிறாராம்.

இடையிடையே வந்து சில வீர வசனங்கள் பேசுவதோடு சரி, போலீஸ் வேலை எதுவும் பார்க்காமல் விஷாலைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கின்றார் சத்யராஜ். அவருக்கு மனைவியாக வருபவரை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறதே என உற்று கவனித்தால், அட நம்ம பழைய நடிகை லட்சுமியின் மகன் ஐஸ்வர்யா! பாவம், ஓரிரு வசனங்கள் கூட அவருக்குத் தரப்படவில்லை.

Shruthi Hassanசுருதிஹாசன் மெழுகு பொம்மையாக – மன்னிக்கவும் – அழகு பொம்மையாக வருகின்றாரே தவிர, மற்றபடி ஈர்க்கவில்லை. இரண்டு வெளிநாட்டு பாடல் காட்சிகளில் அரை குறை ஆடைகளோடு படத்திற்கு கவர்ச்சி ஊட்ட மட்டும் பயன்பட்டிருக்கின்றார்.

மற்றபடி வசனங்களை யோசித்து யோசித்துப் பேசுகின்றார். பிசிறடிக்கு அரை ஆண்குரல் அவருடைய மிகப் பெரிய பலவீனம். அவர் பாடினால் மட்டும் ஏனோ அப்படித் தெரியவில்லை ஆனால் பேசினால்…..

சுருதிஹாசனை ஒரு பாடலுக்கு ஆடவிட்டுவிட்டு, ஆண்ட்ரியாவையே கதாநாயகியாகப் போட்டிருக்கலானோ என இரசிகர்களை யோசிக்க வைத்திருக்கின்றார்கள்.

பின்பாதிக் கதையை நகர்த்துவதில் தடுமாறியிருக்கும் ஹரி, சண்டைக் காட்சிகளையும், நகைச்சுவைக் காட்சிகளையும் மட்டும் வைத்து படத்தை நகர்த்த முற்படுவது நன்றாகத் தெரிகின்றது.

அதிலும், கார் விரட்டும் காட்சிகளில் வாகனங்கள் பறப்பதும், மரங்களில் மோதுவதும், தலைகீழாக விழுவதும் இன்னும் எத்தனை நாளைக்கு காட்டப் போகிறார்களோ தெரியவில்லை! இதையெல்லாம் இரசிகர்கள் இன்னும் இரசிக்கின்றார்கள் என்று இவர்களுக்கு யார் சொன்னது?

இவையெல்லாம் இல்லாத, சூதுகவ்வும், கோலி சோடா, ஜிகர்தண்டா போன்ற படங்களின் மாபெரும் வெற்றிகளைப் பார்த்த பின்னும், இன்னும் ஹரி போன்ற இயக்குநர்களுக்கும், ஏன் பாண்டியநாடு தந்த விஷாலுக்கே மண்டைக்குள் உறைக்கவில்லையே என்பதுதான் இரசிகர்களின் வருத்தம்!

இசை யுவன் சங்கர் ராஜாவாம்! நினைவில் நிற்கும் வண்ணம் ஒரு பாடலும் இல்லை. பின்னணி இசையும் மனதில் நிற்கவில்லை.

நகைச்சுவைக் காட்சிகள் கலகலப்பாக சிரிப்பை வரவழைத்தாலும், ஒருவரை ஒருவர் ஒவ்வொரு காட்சியிலும் அடிக்கடி அறைந்து கொள்கின்றார்கள், அடித்துக் கொள்கின்றார்கள். இதுதான் நகைச்சுவையா?

படம் முழுக்க சூரி உட்பட நகைச்சுவை நடிகர்கள் எல்லோரும் பத்து பதினைந்து அறைகள் வாங்கியிருப்பார்கள் என்பது தெரிகின்றது.

பூஜை – முன் பாதி வரை மங்கலம்! மீதிப் பாதி அமங்கலம்!

-இரா.முத்தரசன்