Home அவசியம் படிக்க வேண்டியவை திரைவிமர்சனம்: ஷாருக்கானின் “ஹேப்பி நியூ இயர்” – கொண்டாடும் அளவுக்கு இல்லை!

திரைவிமர்சனம்: ஷாருக்கானின் “ஹேப்பி நியூ இயர்” – கொண்டாடும் அளவுக்கு இல்லை!

771
0
SHARE
Ad

happy-new-year-movie-poster-newகோலாலம்பூர், அக்டோபர் 28 – தீபாவளித் திரையீடாக கத்தி, பூஜை படங்கள் தமிழ்ப்பட இரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக வெளியாகியிருப்பதைப் போன்று, இந்திப் பட இரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் ஷாருக்கான்- தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “ஹேப்பி நியூ இயர்” (Happy New Year).

வழக்கமான பழிவாங்கும் மையக் கருத்து கொண்ட ஒரு மெல்லிய கதைப் பின்னலை வைத்துக் கொண்டு இனிமையான பாடல்கள், பிரம்மாண்டமான நடனங்கள் என ஜனரஞ்சகமான படைப்பான இயக்கி உருவாக்கியிருக்கின்றார் பிரபல நடன இயக்குநர் ஃபாரா கான். ஏற்கனவே, ஷாருக்கானை வைத்து ‘மே ஹூன் நா”, “ஓம் சாந்தி ஓம்” என இரண்டு வெற்றிப் படங்களைத் தந்தவர் ஃபாரா கான்.

ஆனால் இந்தப் படத்தில் கதையிலும், திரைக்கதையிலும் சொதப்பி விட்டார் இயக்குநர். படம் முதல் நாளே 45 கோடி வசூலித்து சாதனை படைத்தாலும், அதன் உள்ளடக்கம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை.

#TamilSchoolmychoice

கதை

Sharukh Deepika Happy New Yearதந்தையை ஏமாற்றி சிறையில் தள்ளிய வில்லன் ஜேக்கி ஷரோப்பைப் பழிவாங்க தருணம் பார்த்துக் காத்திருக்கின்றார் ஷாருக். துபாய் நகரில் இருக்கும் வில்லன் நடத்தும் உலக நடனப் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதன் மூலம் அவனை நெருங்க முடியும், அவனிடம் பாதுகாப்பாக கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் வைரங்களைக் கொள்ளையடிக்க முடியும், அதன் மூலம் அவனுக்கு தண்டனை வாங்கித் தந்து பழிதீர்த்துக்கொள்ள முடியும் என்ற திட்டத்துடன் செயலில் இறங்குகின்றார் ஷாருக்.

ஆனால், வைரங்களைத் திருடுவதற்காக அவர் சேர்க்கும் கோமாளித்தனமான நண்பர்கள் கூட்டம் நடனமும் கற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அதற்காக சாதாரண நடனக்காரியான மோகினியை (தீபிகா படுகோன்) தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

இவர்கள் 6 பேர் அடிக்கும் லூட்டிகளும், முரண்பாடான குணாதிசயங்களைக் கொண்ட இவர்களுக்கிடையில் நடக்கும் சம்பவங்களும்தான் கதை. அதே வேளையில் நடனப் போட்டியிலும், வைரங்களைத் திருடும் முயற்சியில் அவர்களுக்கு ஏற்படும் சவால்களுமாக கதை நகர்கின்றது.

இருப்பினும் எதிர்பார்த்த சம்பவங்கள், திருப்பங்கள் என திரைக்கதையின் போக்கு உள்ளதால், படம் சற்றே போரடிக்கின்றது. ஆங்காங்கே தொய்வும் ஏற்படுகின்றது. ஷாருக்கானின் முந்தைய படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இருந்த அழுத்தமும், வலுவான கதை அமைப்பும் இதில் இல்லை.

பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கும் வைரத்தைத் திருடுவது பல ஆங்கில, இந்தியப் படங்களில் பல தடவைகள் ஏற்கனவே பார்த்ததுதான்.

இருப்பினும் சுவாரசியமான சம்பவங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அழகான, நவீனமான ஆடை அணிகலன்கள் என மற்ற அம்சங்களில் நம்மைக் கவர்ந்து விடுகின்றார்கள்.

அதிலும் துபாய் நகரின் இரவு நேர வண்ணமயக் காட்சிகள் கண்ணைப் பறிக்கும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றது. இறுதிக்கட்ட நடனப் போட்டிகளின் பிரம்மாண்டமும், மேடையின் விசாலமான அலங்கரிப்புகளும் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கின்றது.

சுவாரசியக் காட்சிகள்

happynewyearபடத்தில் இருக்கும் பலவீனங்களை மறந்து நாம் உட்கார்ந்து பார்ப்பதற்கு  பெரிதும் உதவியிருப்பது தீபிகா படுகோனின் அழகிய தோற்றமும் கவர்ச்சி நடனங்களும்தான்.

துபாய் நகரின் இரவு நேர ஒளி விளக்குகளின் அலங்கார நடனங்கள் கண்ணைப் பறிக்கும் விதத்தில் முழுமையாக படம் பிடிக்கப்பட்டு படத்திற்குள் நுழைக்கப்பட்டிக்கின்றது.

துபாய் நகரின் கட்டிடம் ஒன்றின் உச்சியில் நடைபெறும் சண்டைக்காட்சி ஆங்கிலப் படத்திற்கு நிகராக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றது. அந்தரத்தில் ஷாருக்கான் தொங்கும் காட்சிகளைத் தத்ரூபமாகக் காட்டியிருக்கின்றார்கள்.

படம் முடிந்ததும் தோன்றும் இறுதிப் பாடல் காட்சியில் ஷாருக்கான் தனது மூன்றாவது பிள்ளையான அவரது மகன் அப் ராமோடு விளையாடும் காட்சிகளைக் காட்டுகின்றார்கள்.

Farah Khanஅதே போன்று படத்தின் இயக்குநர் ஃபாரா கான் (படம்)  ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றவர். அந்த அவரது மூன்று பிள்ளைகளையும் படத்தின் இறுதிக் காட்சி பாடலில் காட்டுகின்றார்கள்.

பிரபுதேவாவும் ஷாருக்கானின் குழுவினருக்கு நடனம் கற்றுத் தருபவராக ஐந்து நிமிடக் காட்சியில் வந்து போகின்றார்.

பாடல்கள் இனிமையாக அமைந்துள்ளன. குறிப்பாக தீபிகா படுகோனே பாடுவதாக வரும் பாடல் இனிமையாக திரும்பத் திரும்பக் கேட்கும் வண்ணம் அமைந்துள்ளது.

ஷாருக்கானின் நடிப்புத் திறனுக்கு தீனி போடும் வகையில் எந்தக் காட்சிகளும் இல்லை என்பது மிகப் பெரிய குறை.

அபிஷேக் பச்சான் இரட்டை வேடங்களில் வருகின்றார். ஆனால், சொல்லிக் கொள்ளும் விதமான நடிப்பு இல்லை.

ஹேப்பி நியூ இயர் – கொண்டாடப்பட வேண்டிய படமோ, பார்க்க வேண்டிய படமோ இல்லை என்றாலும், தீபிகா படுகோனேயின் கவர்ச்சி, துபாய் நகர கண்கவர் காட்சிகள், பிரம்மாண்டமான நடனங்கள் ஆகியவற்றுக்காக – பொழுது போக்கிற்காக – ஒரு முறை பார்த்து வைக்கலாம்.

– இரா.முத்தரசன்