Home நாடு முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் அன்வாரைப் பிரதிநிதித்து வழக்காடுகின்றார்

முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் அன்வாரைப் பிரதிநிதித்து வழக்காடுகின்றார்

629
0
SHARE
Ad

Gopal Sri Ram Lawyer புத்ரா ஜெயா, அக்டோபர் 28 –அன்வார் இப்ராகிமிற்கு எதிரான ஓரினச் சேர்க்கை வழக்கில் அன்வாருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு தண்டனை மீதான மேல் முறையீடு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் தொடங்கியது.

அன்வாரின் வழக்கறிஞராக, பல்லாண்டு காலம் முன்னணி வழக்கறிஞராகப் பணியாற்றியவரும் பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான டத்தோ கோபால் ஸ்ரீராம் (படம்) பிரதிநிதிக்கின்றார்.

இதற்கு முன்பு டத்தோ சுலைமான் அப்துல்லா அன்வாரைப் பிரதிநிதித்தார். அவருக்கு பதிலாக தற்போது அன்வாரின் வழக்கறிஞர் குழுவுக்கு கோபால் ஸ்ரீராம் தலைமையேற்கின்றார்.

#TamilSchoolmychoice

சுலைமான் அப்துல்லா, தற்போது உடல் நலமின்றி இருப்பதால் அவருக்குப் பதிலாக பிரபல முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராமைத் தாங்கள் தேர்ந்தெடுத்ததாக அன்வார் கூறினார்.

14 வழக்கறிஞர்களைக் கொண்ட அன்வாரின் தற்காப்பு வாத குழுவில் பிகேஆர் கட்சியின் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா, பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சுரேந்திரன், கர்ப்பாலின் புதல்வரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்ப்பால் சிங், கர்ப்பாலின் புதல்வி சங்கீத் கோர் டியோ மற்றும் ஜே.லீலா, லத்தீபா கோயா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

கோபால் ஸ்ரீராம் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலங்களில் பல பிரபல வழக்குகளை நடத்தியிருக்கின்றார். 1987ஆம் ஆண்டு அம்னோ தேர்தல் தொடர்பில் துங்கு ரசாலி தொடுத்த வழக்கில் துன் மகாதீர் சார்பாக ஸ்ரீராம் வழக்காடினார். அந்த வழக்கின் காரணமாகத்தான், அம்னோ சட்டவிரோதக் கட்சி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, பின்னர் அம்னோ பாரு உருவானது என்பது நினைவுகூரத்தக்கது.

சட்டத் தொழிலின் மீது தணியாத ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீராம், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும், தொடர்ந்து சட்ட ஆலோசகராகவும், சில முக்கிய வழக்குகளிலும் பிரதிநிதித்து வந்தார்.

சட்டத் துறையில் பரந்த ஞானமும், வழக்காடும் திறனும் கொண்ட ஸ்ரீராம் அன்வாரைப் பிரதிநிதிக்கும் காரணத்தால், அன்வாரின் மேல் முறையீட்டு வழக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.