Home நாடு கோபால் ஸ்ரீராம்: ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்கள் (பகுதி 2)

கோபால் ஸ்ரீராம்: ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்கள் (பகுதி 2)

612
0
SHARE
Ad

(கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தன் 79-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம். பல ஆண்டுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றி நாட்டின் முக்கிய வழக்குகளில் வாதாடியவர். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, கூட்டரசு நீதிமன்ற நீதிபதி போன்ற பதவிகளை வகித்தவர். அந்த ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்களையும், அவரின் வழக்கறிஞர் அலுவலகத்தில் 3 மாதம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்ற அனுபவங்களையும் இந்த 2-வது நிறைவுப் பகுதியில் பகிர்ந்து கொள்கிறார் இரா.முத்தரசன்)

இரா.முத்தரசன்

  • தமிழ் ஓசை நாளிதழ் மூடப்பட்ட வழக்கில் அமரர் ஆதி.குமணன் சார்பில் வாதாடிய ஸ்ரீராம்
  • ஸ்ரீராமுக்கும் வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசனுக்கும் என்ன உறவுமுறை?
  • சரஸ்வதியைப் பின்பற்றுங்கள். இலட்சுமி உங்கள் பின்னால் வருவார்– ஸ்ரீராம் கூறிய அறிவுரை

தமிழ் ஓசை நாளிதழுக்காகவும், ஆதி.குமணனுக்காகவும் வாதாடிய ஸ்ரீராம்

1981 ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தமிழ் ஓசை நாளிதழ் தொடங்கப்பட்டது. அதில் முக்கிய பங்குதாரராக இருந்தவர் டத்தோ க.சிவலிங்கம் (பிற்காலத்தில் இஜோக் சட்டமன்ற உறுப்பினராகவும், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தவர்). தமிழ் ஓசையின் ஆசிரியராக இருந்தவர் அமரர் இளைய தமிழவேள் ஆதி.குமணன். மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியத்தின் தீவிர ஆதரவாளராக சிவலிங்கம் இருந்தார். அவர்கள் மூவருக்கும் இடையில் நிலவிய அணுக்கமான நட்பின் காரணமாகவே தமிழ் ஓசை நாளிதழும் உதயமானது.

தமிழ் ஓசை நிறுவனத்தின் வாரிய உறுப்பினர்கள் தன்னை பங்குதாரர் என்ற முறையில் சட்டத்துக்குப் புறம்பாக நடத்துகிறார்கள் என்று கூறி, அந்தப் பத்திரிகை நிறுவனத்தை மூட வேண்டும் என சுமார் 9 வருடங்கள் கழித்து, சில அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடுத்தார் சிவலிங்கம்.

ஆதி.குமணன் – டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம்

அந்த வழக்கை எதிர்த்து ஆதி.குமணனும், தமிழ் ஓசை வாரிய உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக எதிர்வழக்காடினர். உயர் நீதிமன்றத்தில் சிவலிங்கம் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஆதி.குமணன் தரப்பினர், அந்த மேல்முறையீட்டு வழக்கை நடத்த ஒரு சிறந்த வழக்கறிஞர் வேண்டுமென நாடிச் சென்ற வழக்கறிஞர் ஸ்ரீராம். அப்போது தமிழ் ஓசை தரப்புக்கு ஆதரவாக இருந்த அமரர் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியமும் மேல்முறையீட்டு வழக்கை ஏற்று நடத்த ஸ்ரீராமைக் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

1990-இல் தமிழ் ஓசையின் மேல் முறையீட்டு வழக்கு நடைபெற்றது. நான் அப்போது சட்டத்துறை மாணவன் என்பதால் ஆர்வம் காரணமாகவும், டான்ஸ்ரீ சுப்ராவுடன் எனக்கிருந்த அரசியல் ஈடுபாடு காரணமாகவும் அந்த வழக்கு விசாரணையை நேரில் காண நான் நீதிமன்றம் சென்றேன். அப்போதுதான் ஸ்ரீராமின் கம்பீரமான வழக்காடும் திறமையை முதன் முதலில் கண்டேன்.

அமரர் டத்தோ க.சிவலிங்கம்

அந்த வழக்கில் சில சட்ட அம்சங்கள் ஆதி.குமணன் தரப்புக்கு சாதகமாக இல்லாத காரணத்தால், தமிழ் ஓசை நிறுவனம் மூடப்பட வேண்டுமென சிவலிங்கத்தின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஸ்ரீராம் அந்த வழக்கில் தோல்வியடைந்தார். இருந்தாலும் ஆதி.குமணன் தொடர்ந்து ஸ்ரீராமுடன் தொடர்ந்து நட்பு பாராட்டினார். சில சட்ட ஐயப்பாடுகளுக்காக அவ்வப்போது ஸ்ரீராமைச் சந்தித்தும் வந்தார்.

கட்சிக்காரர்களை நூலகத்தில் சந்திக்கும் ஸ்ரீராம்

தனது கட்சிக்காரர்களை எப்போதும் தனது நூலகத்தில்தான் சந்திப்பார் ஸ்ரீராம். அவரின் பிரம்மாண்ட நூலகத்தைப் பார்த்து கட்சிக்காரர்கள் எடுத்த எடுப்பிலேயே பிரமித்து விடுவர்.

வழக்கு விவரங்களைக் கேட்டுவிட்டு, அதற்கான நூல்களையும் ஆவணங்களையும் உதவியாளர் ராஜூவிடம் சொல்ல, அதனை அவர் எடுத்துத் தருவார். கட்சிக்காரரிடம் வழக்கின் சாதகங்களையும் கூறிவிட்டு, இதே போன்று தான் ஏற்கனவே வழக்காடிய வழக்கு விவரங்களையும் அதிலிருந்து சிக்கல்களையும் ஸ்ரீராம் விவரிப்பார். தனக்கான கட்டணத்தையும் தெரிவிப்பார். நாட்டிலேயே மிக அதிகமாக கட்டணம் விதிக்கும் வழக்கறிஞர்களில் ஒருவராக அவர் அப்போதும், எப்போதும் திகழ்ந்தார்.

அதே சமயம் சில வழக்குகளை நண்பர்களுக்காக, சில நல்ல நோக்கங்களுக்காக இலவசமாக நடத்தியிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் அவர் கட்டணம் வாங்காமல் இலவசமாக அரசு தரப்பு வழக்கறிஞராக வழக்கை நடத்தித் தந்தார்.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு தவறாமல் காணிக்கை செலுத்துபவர்

விபூதி, குங்குமம் போன்ற இந்து சமய அடையாளங்களை அவர் வெளியே தெரியும்படி எப்போதும் காட்டிக் கொண்டதில்லை. ஆனால், திருப்பதி வெங்கடாசலபதி மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவரின் பிரத்தியேக அலுவலக அறையில் இந்துக் கடவுள்களின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும் என அவரின் உதவியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தனது வழக்கறிஞர் கட்டண வருமானத்தில் ஒரு பகுதியை, இந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கைப்படி, 10 விழுக்காட்டு தொகையை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாகச் செலுத்தும் வழக்கத்தையும் அவர் கொண்டிருந்தார் என அவரின் அலுவலக உதவியாளர்கள் நான் அங்கு பணியாற்றிய காலத்தில் தெரிவித்தனர்.

நூலகத்தையும், நூல்களையும் நேசித்தவர்

ஒரு சிறந்த வழக்கறிஞருக்கு அடிப்படையும் ஆதாரமும் சட்ட நூல்கள்தான் என்பதை ஆணித்தரமாக நம்பி, அதற்கேற்ப நடந்து கொண்டவர் ஸ்ரீராம். சட்டப்புத்தக விற்பனை முகவர்கள் புதிய நூல்கள் வந்ததும் அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு சந்திக்கும் முதல் வழக்கறிஞர் ஸ்ரீராமாகத்தான் இருப்பார். அவரும் நூல்களின் பட்டியலைப் பார்த்து தேவையான நூல்களை வாங்கிக் கொள்வார்.

எங்களைப் போன்ற பயிற்சியாளர்களுக்கு அவர் அடிக்கடி இட்ட கட்டளை ‘பேனாவுடன் நூல்களை அணுகாதீர்கள். பென்சிலுடன்தான் செல்லவேண்டும்’ என்பதாகும். நூல்களின் பக்கங்களில் பேனா மையின் ஒரு சிறு கீறல் கூட இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். யாராவது பேனாவைக் கையில் வைத்துக் கொண்டு நூலைக் கையாள்வதைக் கண்டால் சத்தம் போடுவார். ஏசுவார். ‘புத்தகங்களைக் கையாளும்போது கையில் பென்சில் வைத்துக் கொள்ளுங்கள். பேனாவை வைத்துக் கொள்ளாதீர்கள்’ என உரக்கக் கூறுவார்.

அவரின் நூலகத்தின் மதிப்பு அப்போதே சுமார் 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலாக இருக்கும் என்பார்கள். நீதிபதியானபோது தனது வழக்கறிஞர் நிறுவனத்தையும் அதனுடன் தனது நூலகத்தையும் தனது சக பங்குதாரர் வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர்களுக்கிடையில் காணப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட, தனது நூலகத்தைத் தன்னிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என வழக்கு தொடுத்தார் ஸ்ரீராம். ஆனால் அந்த நூலகத்தை அவரால் மீண்டும் பெற முடியவில்லை.

ஸ்ரீராமுக்கும் வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசனுக்கும் என்ன உறவு முறை?

டத்தோ அம்பிகா சீனிவாசன்

ஸ்ரீராமின் உடன் பிறந்த மூத்த சகோதரர் அமரர் சீனிவாசன். யூரோலோஜிஸ்ட் என்னும் சிறுநீரகங்கள் தொடர்பான மருத்துவர். அவர் வாழும்  காலத்தில் நாட்டிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். சீனிவாசனின் மகள்தான் நம் மலேசியாவில் ஒரு சமூகப் போராளியாக பிரபலமாக விளங்கி வரும் வழக்கறிஞர் டத்தோ அம்பிகா சீனிவாசன். ஆக, அம்பிகாவின் சிற்றப்பாதான் ஸ்ரீராம்!

உழைப்போடு ஓய்வெடுக்கவும் தெரிந்தவர்

ஸ்ரீராம் தொழில் வெற்றிக்கு முக்கியக் காரணம் அவரின் திட்டமிட்ட கடுமையான உழைப்புதான். அதேபோன்று சட்டத் தொழில் என்ற இலக்கில் மட்டுமே முழுக் கவனம் செலுத்தி வந்ததும் அவரின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

கடுமையாக உழைத்த வேளையில், அதற்கேற்ப ஓய்வெடுக்கவும் தெரிந்தவர் ஸ்ரீராம். எப்போதும் ஜூன் மாத கோடை விடுமுறையில் சுமார் 2 வாரம் முதல் 1 மாதம் வரை இலண்டனுக்கு சென்று விடுவார். அங்கும் பிரிட்டனின் வழக்கறிஞர்களையும், சட்ட அறிஞர்களையும் சந்திப்பார் – சட்ட நூலகங்களைத் தேடிப் போவார் – தனது சட்ட அறிவாற்றலை மேலும் கூர்மைப்படுத்திக் கொள்வார் – என அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தனது திட்டமிட்ட விடுமுறைக்கு ஏற்ப, ஜூன் மாத காலகட்டத்தில் அவர் எந்த வழக்குக்கும் தேதி கொடுக்கமாட்டார். நீதிமன்றம் தேதி நிர்ணயித்தாலும் அதனை மாற்றச் சொல்வார்.

அதேபோல், டிசம்பர் மாதத்தில் சுமார் 2 வார காலம் ஓய்வுக்காக இந்தியா சென்று விடுவார். அவரின் மனைவிக்கு நடனம், சங்கீதம் போன்ற கலைகளில் மிகவும் ஈடுபாடு என்பதால் சென்னையில் நடைபெறும் இசை விழாக்களைப் பார்த்து ரசிப்பதற்காக அங்கு மனைவியுடன் செல்வார்.

சரஸ்வதியை ஏற்றுக் கொள்ளுங்கள், இலட்சுமி பின்னாலேயே வருவார்

ஒருமுறை வழக்கறிஞர் மன்றத்தில் தனது நீதித்துறை அனுபவங்கள் குறித்து உரை நிகழ்த்த ஸ்ரீராம் அழைக்கப்பட்டிருந்தார். பல இன மக்கள் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அப்போது அவர் கூறிய வாசகத்தை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன்.

“சரஸ்வதியை எப்போதும் கும்பிடுங்கள், பின்பற்றுங்கள். உங்கள் பின்னாலேயே இலட்சுமியும் வருவார்” என்பதுதான் அந்த வாசகம்.

ஒருவன் தொழிலில் பிரகாசிக்க, முன்னேற, எப்போதும் கல்வியையும், அறிவாற்றலையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படக் கூடாது. கல்வி, அறிவாற்றலுக்கான இந்துக் கடவுளாகப் போற்றப்படுவர் சரஸ்வதி. கல்வி, அறிவாற்றலை நீங்கள் பெருக்கிக் கொண்டால், இலட்சுமி என்ற பணம் கொடுக்கும் தெய்வம் உங்கள் பின்னாலேயே வந்து அள்ளிக் கொடுக்கும் என்பதுதான் அவர் கூறிய அந்த வாசகத்தின் பொருள்.

அனைவரும் எப்போதும் பின்பற்ற வேண்டிய அறிவுரை இது.

செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்

மூளைக்கு வேலை தரும் சதுரங்கம் (செஸ்) விளையாட்டு அவருக்குப் பிடித்தமான ஒன்று. காரில் ஏறியதும், கையடக்க வடிவில் இருக்கும் கணினி செஸ் சாதனத்தை வைத்துக் கொண்டு தனியாக அதனுடன் விளையாடத் தொடங்கி விடுவார்.

மெர்சிடிஸ் கார்களின் மீதும் அவருக்கும் மோகம் உண்டு. பெரும்பாலும் அவர் மெர்சிடிஸ் ரக கார்களையே பயன்படுத்துவார். ஒருமுறை ஜெர்மனி சென்று மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிக்கும் தொழிற்சாலையை நேரடியாகச் சுற்றிப்பார்த்த அனுபவங்களை அலுவலகத்தில் பகிர்ந்து கொண்டார்.

அவர் பயன்படுத்தும் கார்களின் முதல் எழுத்துகள் பெரும்பாலும் BAR என இருக்கும். BAR COUNCIL என்பதைக் குறிக்கும் வகையில் அந்த எழுத்துகளை அவர் பயன்படுத்துவார்.

3 மாதங்களில் ஸ்ரீராம் நிறுவனத்தில் இருந்து விலகினோம்

சுமார் 3 மாதங்கள் ஸ்ரீராம் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பின்னர் நானும் எனது இரண்டு நண்பர்களும் அங்கிருந்து விலகத் தீர்மானித்தோம். ஸ்ரீராம் என்ற மாபெரும் சட்ட மேதையின் கீழ் பயிற்சி பெறுவது பெறற்கரிய வாய்ப்பு என்றாலும், அந்த சமயத்தில் அங்கு மிகப் பெரிய வழக்குகளை மட்டுமே கையாண்டு வந்தார்கள். ஒவ்வொரு வழக்குக்கும் பெட்டி, பெட்டியாக ஆவணங்கள் குவிந்திருக்கும். மில்லியன் கணக்கான மதிப்புடைய வழக்குகள் என்பதால் அந்நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர்களே நேரடியாக அந்த வழக்குகளைக் கையாளுவார்கள்.

எனவே, எங்களுக்கு நீதிமன்றம் செல்லும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவே, இன்னொரு சிறிய வழக்கறிஞர் நிறுவனத்தில் இணைந்தால் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் அமையும். பலதரப்பட்ட வழக்குகளின் மூலம் நல்ல அனுபவம் கிடைக்கும் என்ற சிந்தனையோடு, ஸ்ரீராம் நிறுவனத்திலிருந்து விலகி வெவ்வேறு வழக்கறிஞர் நிறுவனங்களில் இணைந்து நானும் எனது இரண்டு நண்பர்களும் எங்களின் பயிற்சிகளைத் தொடர்ந்தோம். நிறைவு செய்தோம்.

இருப்பினும், அந்த 3 மாதங்களில் ஸ்ரீராம் என்ற மாபெரும் சட்ட மேதையின் கீழ் பெற்ற பயிற்சிகள் – அனுபவங்கள் – அங்கு நடந்த சுவாரசியங்கள் – எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளாக இன்றும் பசுமையுடன் நிழலாடுகின்றன.

ஸ்ரீராம் மறைந்தாலும், அவர் வழக்காடிய வழக்குகளின் விவரங்களும், அவரின் வாதங்களின் சாராம்சங்களும் எண்ணிலடங்காத அளவில் நீதிமன்ற வழக்கு தொகுப்புகளில் (Law Journals) பதிவாகியிருக்கின்றன. அவரின் 800-க்கும் மேற்பட்ட தீர்ப்புகளும் அந்த நூல்களில் பதிவாகியிருக்கின்றன. அவற்றின் வழி அவர் எப்போதும் வழக்கறிஞர்கள் மத்தியில் வாழ்ந்து வருவார். நினைவு கூரப்படுவார்!

தொடர்புடைய முந்தைய கட்டுரை ;

கோபால் ஸ்ரீராம்: ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்கள் (பகுதி 1)