Home நாடு கோபால் ஸ்ரீராம்: ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்கள் (பகுதி 1)

கோபால் ஸ்ரீராம்: ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்கள் (பகுதி 1)

498
0
SHARE
Ad

(கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தன் 79-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம். பல ஆண்டுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றி நாட்டின் முக்கிய வழக்குகளில் வாதாடியவர். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, கூட்டரசு நீதிமன்ற நீதிபதி போன்ற பதவிகளை வகித்தவர். அந்த ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்களையும், அவரின் வழக்கறிஞர் அலுவலகத்தில் 3 மாதம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் இரா.முத்தரசன்)

  • காலை 7.30 மணிக்கு அலுவலகம் வரும் பழக்கம்
  • சட்ட நூல்களையும் தனது நூலகத்தையும் நேசித்தவர்
  • எப்போதும் சட்ட விவகாரங்களை மட்டும் சக வழக்கறிஞர்களுடன் பேசுபவர்

இரா.முத்தரசன்

வழக்கறிஞராக வேண்டும் என்ற வேட்கையோடு படித்து தொழிலுக்கு வருபவர்கள் சந்திக்கும் முதல் சவால் ஒன்று உண்டு. 7 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞராகப் பணிபுரிந்த ஒரு மூத்த வழக்கறிஞரிடம் 9 மாதங்கள் முழுநேரமாகப் பயிற்சி (சேம்பரிங் – Chambering) பெற வேண்டும். பயிற்சியின் முடிவில், தான் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட தகுதியானவன்தான் என அந்த மூத்த வழக்கறிஞரிடம் கையெழுத்து பெறவேண்டும்.

அதன்பின்னர்தான் வழக்கறிஞர் மன்றம் அந்த நபரை வழக்கறிஞராகத் தொழில் புரிய  நீதிமன்றத்தில் அனுமதிப்பார்கள்.

இந்த 9 மாத பயிற்சிக் காலத்தின்போது சுமார் 500 ரிங்கிட் வரைதான் வழக்கறிஞர் நிறுவனங்கள் சம்பளமாகத் தருவார்கள். எனவே, அந்த நிதிச் சிக்கலையும் 9 மாதங்களுக்கு புதிய வழக்கறிஞர்கள் சமாளிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

வழக்கறிஞராக விரும்புபவர்களுக்கு இந்த 9 மாதம்தான் அவர்களின் தொழில் நிபுணத்தையும், அறிவாற்றலையும் செதுக்கும் களமும் காலகட்டமும்! அவர்களின் குருவாக அமையும் மூத்த வழக்கறிஞரிடம் சில நல்ல அனுபவங்களும், போதனைகளும் இளம் வழக்கறிஞர்களுக்குக் கிடைக்கும்.

சரி! கடந்த ஜனவரி 29-ஆம் தேதி காலமான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் பற்றிய நினைவஞ்சலிக் கட்டுரையில் ஏன் இந்த முன்னோட்டம்? விஷயத்திற்கு வருகிறேன்.

1990-ஆம் ஆண்டுகளில் எனது வழக்கறிஞர் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, சிஎல்பி என்னும் (Certificate in Legal Practice) வழக்கறிஞராவதற்கான நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுவிட்டு, 9 மாத கால சேம்பரிங் பயிற்சியைப் பெற நான் சேர்ந்தது ஸ்ரீராமின் வழக்கறிஞர் நிறுவனத்தில்தான்.

அப்போது அவரின் நிறுவனம் ‘ஸ்ரீராம் அண்ட் கம்பெனி’ (Sri Ram & Co) என்னும் பெயரில் இயங்கி வந்தது.

ஒரு மூத்த, சிறந்த வழக்கறிஞரின் கீழ் பயிற்சி பெற்றால் நல்ல தொழில் அனுபவம் கிடைக்கும் எனக் கூறி நட்பு வட்டார வழக்கறிஞர்கள் ஸ்ரீராம் நிறுவனத்தை சிபாரிசு செய்தனர். அங்கு பயிற்சிக்கான காலி இடமும் இருப்பாகக் கூறவே, என்னுடன் சேர்ந்து மேலும் 2 நண்பர்களும் ஸ்ரீராம் நிறுவனத்தில் இணைந்து கொண்டோம்.

அங்கு பயிற்சி பெற்ற 3 மாத காலத்தில் ஸ்ரீராமின் கீழ் பயிற்சி பெறும், அவரின் குணநலன்களை, பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளும் அற்புதமான அனுபவம் கிடைத்தது. பயிற்சியின்போது அவரிடம் இருந்து சிறந்த சட்டப் பயிற்சி நுணுக்கங்களும், தொழில் யுக்திகளும், ஏராளமான வசைகளும் கிடைத்தன.

அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த நினைவஞ்சலிக் கட்டுரை!

காலையில் அலுவலகம் வரும் ஸ்ரீராம்

தலைநகர் லெபோ அம்பாங் சாலையிலுள்ள பேங்க் ஆஃப் தோக்கியோ கட்டடத்தின் 20-வது மாடியில் ஸ்ரீராமின் விஸ்தாரமான அலுவலகம் அமைந்திருந்தது. நீதிமன்றங்கள் அப்போது டத்தாரான் மெர்டேக்கா எதிர்ப்புறம் அமைந்திருந்த அரசாங்கக் கட்டடங்களில் அமைந்திருந்தன. எனவே, நீதிமன்றங்களின் அருகாமையில்தான் ஸ்ரீராம் அலுவலகமும் அமைந்திருந்தது. அவருடன் அப்போது (டத்தோ) விஜயகுமார், சாகுல் ஹாமீட் ஆகியோர் உள்ளிட்ட சில வழக்கறிஞர்கள் பணிபுரிந்தனர்.

காலை 7.30 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விடுவார் ஸ்ரீராம். அவரின் இல்லம் அமைந்திருந்தது ஜாலான் அம்பாங் வட்டாரத்தில்! எனவே, அதிகாலையில் எழுந்தால்தான் ஒருவர் கோலாலம்பூரின் வாகன நெரிசலைத் தாண்டி காலை 7.30 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்தடைய முடியும்.

சில சமயங்களில் அவரின் நண்பர்களோ, சக வழக்கறிஞர்களோ அவரைப் பார்க்க வேண்டும் என நேரம் கேட்பார்கள். “சரி! காலை 7.30 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விடுங்கள். சந்திக்கிறேன்” என்பார்.

சந்திக்க நேரம் கேட்டவர்கள் அதிர்ச்சியடைவார்கள். சிலர் தயங்குவார்கள். “ஏன் நான் வரும்போது உங்களால் வரமுடியாதா?” என பதிலுக்குக் கேட்பார் ஸ்ரீராம்.

நூலகத்தில் அமர்ந்து பணிபுரிவார்

அலுவலகத்தில் அவருக்கென தனியறை இருந்தாலும் அங்கு செல்லமாட்டார். அவர் அலுவல்களைப் பார்ப்பது அவரின் பிரம்மாண்டமான நூலகத்தில்தான். அங்குள்ள நீண்ட, பெரிய மேசையில் அமர்ந்து தனக்கான கடிதங்களையும், வழக்கு ஆவணங்களையும் காலை 8.30 மணிவரை பார்ப்பார்.

எங்களைப் போன்ற பயிற்சியாளர்களுக்கும் அதே நூலகத்தில்தான் மேசைகள் ஒதுக்கப்பட்டு நாங்கள் பணிபுரிந்து வந்தோம். எனவே, அவரின் உரையாடல்கள், கட்சிக்காரர்களிடம் எவ்வாறு விவாதிக்கிறார், எப்படிப் பேசுகிறார், அலுவலகப் பணியாளர்களை எப்படி ஏசுகிறார் என்பதெல்லாம் எங்களுக்குப் பரிச்சயம்.

எங்களை அழைத்து சில சமயங்களில் வழக்கு விவரங்களைச் சொல்லி, சில நூல்களை, நீதிமன்ற தீர்ப்பையோ எடுத்து வரச் சொல்வார். தவறாகக் கொண்டு வந்தால் சத்தம் போடுவார். அவர் கடுமையாக நடந்து கொள்வதற்கும், கோபப்படுவதற்கும் காரணம், தொழிலை பக்தியுடனும், அக்கறையுடனும் அவர் அணுகியதால்தானே தவிர, மற்ற காரணங்கள் அல்ல என்பதை நாங்களும் போகப் போக புரிந்து கொண்டோம்.

காலை 9.00 மணிக்கெல்லாம் நீதிமன்றம் செல்லும் வழக்கம்

காலை 7.30 மணிக்கு அலுவலகம் வருபவர் 8.30 மணி வரை பணிகளைப் பார்த்து விட்டு,  பின்னர் குளியலறையில் அவருக்காக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர்களுக்கான அங்கியை எடுத்து அணிந்து கொள்வார். காலையில் ஸ்ரீராம் அணியும் வழக்கறிஞர் அங்கியைத் தயார் செய்து வைப்பது அவரின் உதவியாளர் ராஜூ என்பவர்தான். அதில் ஏதாவது ஒரு குறை இருந்தாலோ, பொத்தான்கள் சரியாக இல்லையென்றாலோ, சட்டை கசங்கியிருந்தாலோ, ஸ்ரீராம் ஆத்திரப்படுவார். சத்தம் போடுவார். எல்லா விஷயங்களும் மிகச் சரியாக (Perfection) இருக்க வேண்டும் என விரும்புவார் ஸ்ரீராம்.

காலை 8.45 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு காரில் நீதிமன்றம் சென்றடைவார். அப்போது அவர் நிறைய வழக்குகளைக் கையாண்டு வந்ததால் தினமும் ஏதாவது ஒரு வழக்கு விசாரணை இருக்கும். சரியாக காலை 9.00 மணிக்கெல்லாம் நீதிமன்றம் சென்றடைவார். தனது வழக்குக்கான விசாரணை எத்தனை மணிக்குத் தொடங்கினாலும், காலை 9.00 மணிக்கெல்லாம் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்ற வழக்கத்தைக் கடைப்பிடிப்பார்.

சில வழக்கறிஞர்கள் தங்களின் வழக்குக்கான நேரம் எப்போது என நீதிமன்றத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் நீதிமன்றம் செல்வர். ஸ்ரீராம் எப்போதுமே அவ்வாறு செய்து நாங்கள் பார்த்ததில்லை.

ஸ்ரீராமுக்கு வாய்த்த உதவியாளர் ராஜூ

ஸ்ரீராமுக்கு ராஜூ என்ற உதவியாளர் இருந்தார். அவருக்கு எல்லாமே ராஜூதான். 9-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த ராஜூவை ஸ்ரீராம் அற்புதமான பயிற்சி தந்து உருமாற்றியிருந்தார்.

ஸ்ரீராம் கேட்கும் வழக்கு விவரங்களையும், நூல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் ராஜூ. கையில் எப்போதும் ஒரு குறிப்புப் புத்தகம் வைத்திருப்பார். அதில் ஒவ்வொரு துறை வழக்குக்கும் சம்பந்தப்பட்ட நூல்கள், ஸ்ரீராம் கையாண்ட வழக்குகளின் எண்கள், அதற்கான ஆவணங்கள் என்ன என்பது போன்று விவரங்களை எழுதி வைத்திருப்பார்.

உதாரணமாக, நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால், அது தொடர்பான பக்கத்தைத் திருப்பி, ஸ்ரீராம் கேட்க, கேட்க, உடனுக்குடன் அந்த நூல்களை ராஜூ எடுத்துத் தரும் பாங்கு அழகாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.

அலுவலகத்தில் எப்போதும் உணவு உண்ணும் பழக்கம்

நண்பகலில் வழக்கு முடிந்ததும் மீண்டும் அலுவலகம் திரும்புவார். உதவியாளர்களிடம் சொல்லி தனக்கு வேண்டிய மதிய உணவை வாங்கி வரச் சொல்வார். அசைவமும் சாப்பிடுவார். அண்மையக் காலத்தில் அவர் சைவமாக மாறிவிட்டார் என ஒரு வழக்கறிஞர் நண்பர் தெரிவித்தார்.ஸ்ரீராம் மதிய உணவின்போது அலுவலகத்திலுள்ள சக வழக்கறிஞர்களும் அவருடன் இணைந்து உணவு உண்பர். சில சமயங்களில் மற்ற நிறுவனத்தின் வழக்கறிஞர்களையும் ஏதாவது சட்டம் சம்பந்தமாக விவாதிக்க இருந்தால் அழைப்பார்.

மதிய உணவு வேளையின்போது பெரும்பாலும் வழக்கு, சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை மட்டுமே பேசுவார். மதிய உணவு முடிந்ததும் பிற்பகலில் வழக்கு விசாரணை தொடர்ந்தால் மீண்டும் நீதிமன்றம் செல்வார். அல்லது அலுவலகத்தில் மாலை வரை பணியில் ஆழ்ந்திருப்பார். வெளியில் எங்கும் செல்ல மாட்டார்.

அதே வேளையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் வந்து பணிபுரிய மாட்டார்.

அவர் சட்டத்துறை மாணவராக இருந்தபோதும்கூட பொழுதுபோக்கு நேரங்களில் சட்டம் சம்பந்தமாகவும், நூல்கள் சம்பந்தமாகவும் மட்டுமே பேசுவார் என அவரின் பழைய நண்பர்கள் கூறுவார்கள்.

மற்றபடி அவர் அரசியல் பற்றியோ, பொது விவகாரங்கள் பற்றியோ அரட்டை அடிக்கும் வழக்கம் அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை என்பதை அலுவலகத்திலும் பார்த்தோம். அவரின் நண்பர்கள் கூறவும் கேட்டோம்.

தொழிலை நேசித்தவர் – கௌரவம்சிவாஜி கணேசன் போன்ற குணாதிசயம்

ஸ்ரீராம் போன்று தனது தொழிலை நேசித்தவர்கள், காதலித்தவர்கள் வெகு அபூர்வம். அவர் பொது நிகழ்ச்சிகளிலோ, சமூக இயக்கங்களிலோ ஈடுபாடு காட்டியதில்லை. எப்போதும் சட்டம், வழக்குகள் இவற்றைப் பற்றித்தான் அவரின் பேச்சு இருக்கும். 1970-ஆம் ஆண்டின் மே மாதத்தில் முதன் முதலாக வழக்கறிஞராக மலேசிய நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டார் ஸ்ரீராம்.

கௌரவம் படத்தில் ரஜினிகாந்த் என்னும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்று அற்புதமாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன். ஸ்ரீராமை அந்தக் கதாபாத்திரத்தில் அப்படியே பொருத்திக் கொள்ளலாம். அவ்வளவு ஒற்றுமைகளை அந்தக் கதாபாத்திரத்தோடு கொண்டவர் ஸ்ரீராம். எந்த வழக்கிலும் தோல்வியடையக் கூடாது என்ற நோக்கோடு செயல்படும் போர்க்குணம் கொண்டவர் ஸ்ரீராம். கடுமையான உழைப்பு அவரின் இன்னொரு சிறப்பம்சம்.

கௌரவம் படத்தில் நீதிபதியாக ஆசைப்படுவார் சிவாஜி. அதேபோல ஸ்ரீராமுக்கும் அத்தகைய வாய்ப்பு வந்தபோது, இலட்சக்கணக்கான வருமானம் தந்து கொண்டிருந்த வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு நீதிபதியானார் ஸ்ரீராம். நீதிபதிக்கான சம்பளம் என்று பார்த்தால் அவரின் அப்போதைய வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இருக்காது.

இருந்தாலும், சட்டத்தின் மீதும், நீதிபரிபாலனத்தின் மீதும் கொண்ட காதலினால் நீதிபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

நீதிபதியாகவும் முத்திரை பதித்தவர்

கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம்

பொதுவாக, ஒரு வழக்கறிஞர் முதலில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு சில வருடங்களுக்குப் பின்னரே மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் கூட்டரசு நீதிமன்றத்திற்கும் பதவி உயர்த்தப்படுவார்.

ஆனால், 1994-ஆம் ஆண்டில் முதன் முதலாக மேல்முறையீட்டு நீதிமன்றம் (கோர்ட் ஆஃப் அப்பீல்- Court of Appeal) உருவாக்கப்பட்டபோது, அதன் நீதிபதிகளில் ஒருவராக நேரடியாக நியமிக்கப்பட்டவர் ஸ்ரீராம். அந்த அளவுக்கு அவரின் சட்ட அறிவாற்றல் அரசாங்கத் தரப்பிலும் பெரிதும் மதிக்கப்பட்டது.

15 ஆண்டுகள் மேல்முறையீட்டு நீதிபதியாகப் பணியாற்றிய பின்னர் கூட்டரசு மேல்முறையீட்டு நீதிபதியாக அவர் நியமனம் பெற்றார். நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் 800-க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை எழுதி,  2010-ஆம் ஆண்டில் பதவி ஓய்வு பெற்றார்.

ஆடிய பாதமும், பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பார்கள். பதவி ஓய்வு பெற்ற பின்னர் பொதுவாக நீதிபதிகள் வழக்கறிஞர்கள் தொழிலுக்குத் திரும்ப மாட்டார்கள். ஆனால், ஸ்ரீராம், தான் எப்போதும் காதலித்த வழக்கறிஞர் தொழிலுக்கு மீண்டும் திரும்பினார். தீவிரமாக ஈடுபட்டார்.

ஸ்ரீராம் அலுவலகத்தில் வழக்கறிஞராவதற்காக நான் பயிற்சி பெற்றாலும், ஸ்ரீராமை அதற்கு முன்னரே முதன் முதலில் சந்தித்தது ‘தமிழ் ஓசை’ நாளிதழ் மூடப்பட்ட வழக்கின்போதுதான்!

ஸ்ரீராமுக்கும் ‘தமிழ் ஓசை’ மூடப்பட்ட வழக்குக்கும் என்ன சம்பந்தம்?

(அடுத்து பகுதி -2)

  • தமிழ் ஓசை நாளிதழ் மூடப்பட்ட வழக்கில் அமரர் ஆதி.குமணன் சார்பில் வாதாடிய ஸ்ரீராம்
  • ஸ்ரீராமுக்கும் வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசனுக்கும் என்ன உறவுமுறை?
  • சரஸ்வதியைப் பின்பற்றுங்கள். இலட்சுமி உங்கள் பின்னால் வருவார்– ஸ்ரீராம் கூறிய அறிவுரை

கோபால் ஸ்ரீராம்: ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்கள் (பகுதி 2)