Home உலகம் உணவு பாதுகாப்பில் நிரந்தர தீர்வு வேண்டும் – உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா கோரிக்கை!

உணவு பாதுகாப்பில் நிரந்தர தீர்வு வேண்டும் – உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா கோரிக்கை!

624
0
SHARE
Ad

WTOநியூயார்க், அக்டோபர் 28 – வளர்ந்து வரும் நாடுகளில் உணவு பாதுகாப்பிற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா உலக வர்த்தக அமைப்பிடம் வலியுறுத்தி உள்ளது.

ஜெனிவா நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உலக வர்த்தக அமைப்பின் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது உலக நாடுகள் இடையே வர்த்தக நடைமுறை ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சி நடைபெற்றது. எனினும் அந்த முயற்சிக்கு இந்தியா முட்டுக்கட்டையிட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தும், இந்தியா தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை.

#TamilSchoolmychoice

அதற்கு முக்கியக் காரணம், வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் ஏழை எளியோருக்கு உணவுப்பொருட்களை மானிய விலையில் வழங்கவும், உணவு தானியங்களை தேவையான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ளவும் அந்நாடுகளுக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதாகும். இதற்கு உலக வர்த்தக அமைப்பு மறுப்பு தெரிவித்த போது, இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது.

இந்நிலையில், ஐ.நா.பொதுச்சபையில் இது தொடர்பாக விவாதம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான ஆலோசகர் அமித் நாராங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

“வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு, நீடித்த வளர்ச்சி மற்றும் உணவு பாதுகாப்பு போன்ற அடிப்படை காரணிகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. மற்ற விவகாரங்களுக்கு செலுத்தும் முக்கியத்துவத்தை உலக வர்த்தக அமைப்பு இது போன்ற காரணிகளிலும் செலுத்த வேண்டும்.”

“உலக வர்த்தக அமைப்பின் சட்ட திட்டங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பிற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். உலக வர்த்தக அமைப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாலியில் நடத்திய அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா ஆர்வத்துடன் பங்கேற்றது. மேலும், அந்த மாநாட்டின் முடிவில் இந்தியா முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவற்றில் இருந்து இந்தியா எப்போதும் பின்வாங்காது”

“ஆனால் வர்த்தக வசதி தொடர்பான முடிவில் உலக நாடுகள் கவனம் செலுத்தும் அதே வேளையில், உணவு பாதுகாப்பு விவகாரத்திலும் போதிய கவனம் செலுத்த வேண்டும். அவற்றில் மாற்றம் கொண்டுவரும் வரை இந்தியாவின் இது தொடர்பான தொடர் கோரிக்கை முன்வைத்துக் கொண்டே இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.