புதுடெல்லி, மே 22 – ‘லஞ்சம் வாங்குவதும் குற்றம்; லஞ்சம் கொடுப்பதும் குற்றம்’ என்ற கருத்து உலகளாவிய அளவில் வலுத்து வரும் வேளையில், ‘ஒருவகையான லஞ்சம் வாங்கலாம்’என்ற கருத்துக் கணிப்பை எர்ன்ஸ்ட் அண்டு எங் என்ற அமைப்பு வெளியிட்டிருப்பது, அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இவ்வமைப்பு ஐரோப்பா, இந்தியா, ஆப்பிரிக்கா உட்பட 38 நாடுகளைச் சேர்ந்த 3,800 பெருநிறுவனப் பணியாளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 66 சதவீதம் பணியாளர்கள் இத்தகைய கருத்தைக் கூறியுள்ளனர்.
“வர்த்தகப் பணிகளைப் பெறப் பரிசு கொடுப்பதும் வாங்குவதும் வர்த்தகம் நிலைக்க உதவும் என்பதால் அது நியாயமானது தான்” என்று 52 சதவீதம் பேரும், “வேலையை விரைவில் முடித்துத் தர பணம் பெறுவது நியாயமானது தான்” என்று 27 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புக் கொள்கைகளுக்கு உடன்படுவது, தொழில் போட்டியைப் பாதிக்கும் என்றும் 35 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 59 சதவீதம் பேர் தான் லஞ்சத்துக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டு இருந்தனர்.
ஆனால்,இவ்வாண்டு 66 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் லஞ்சத்திற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டிருப்பது, லஞ்சத்திற்கு ஆதரவு பெருகி வரும் போக்கையே காட்டுகிறது.
ஒவ்வொரு நாடும் ஒருபுறம் லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் லஞ்சத்தை அறவே ஒழிக்கப் பாடுபட்டு வரும் நிலையில், இன்னொரு புறம் லஞ்சத்திற்கான ஆதரவு பெருகி வருவது ஆபத்திற்கான அறிகுறியாகவே படுகிறது.