புதுடெல்லி, அக்டோபர் 29 – புதுடெல்லி உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞரின் மனைவி ஃபாத்திமா அரசாங்கம் தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், உயிரியல் பூங்கா நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இளைஞரை புலி தாக்குவது தொடர்பான காணொளிப் பதிவை அளிக்குமாறு ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி வெள்ளைப் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் தவறி விழுந்த இளைஞரைப் புலி தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரியல் பூங்காவில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என பலியான மக்சூதின் மனைவி ஃபாத்திமா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ள அவர், மக்சூத் வருமானத்தை மட்டுமே நம்பி குடும்பம் இயங்கி வந்ததாகவும், மக்சூதின் தாயார் (43 வயது) மற்றும் சகோதரர் (18 வயது) ஆகியோரும் அடங்கிய குடும்பத்தை மக்சூதின் தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே புறக்கணித்துவிட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
புலி அடைக்கப்பட்டிருந்த பகுதியில் தவறி விழுந்த பின்னர், 15 – 20 நிமிடங்களுக்குப் பிறகே மக்சூத் புலியால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தகுந்த கால அவகாசம் இருந்தும் உயிரியல் பூங்கா நிர்வாகம் தனது கணவரை காப்பாற்ற தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.