அகமதாபாத் – இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டுமே ஆசிய சிங்கம் வசிக்கிறது. இங்குள்ள அம்ரேலி மாவட்டம் பாரட் கிராமத்துக்கு லபுபன் சோலங்கி (வயது 45) என்ற பெண் தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அந்த பகுதியில் மாங்காய் பறிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வேலை செய்வதற்காக இவர் வந்திருந்தார்.
இரவில் தனது உறவினர்களுடன் மாந்தோப்பில் லபுபன் சோலங்கி படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த சிங்கம், லபுபன் சோலங்கி என்ற பெண்னை கடித்து இழுத்து சென்றது. அப்போது அவர் கூச்சலிட்டார்.
உடனே உறவினர்களும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடிவந்தனர். 400 மீட்டர் தூரத்துக்கு சிங்கத்தை விரட்டிச் சென்றனர். ஆனால் சிங்கம் லபுபன் சோலங்கியை விடாமல் இழுத்து சென்றது. காலையில் பொதுமக்கள் திரண்டு சென்று தேடினார்கள். லபுபன் சோலங்கி அங்கு பிணமாக கிடந்தார்.
இதேபோன்று கடந்த மாதம் 19-ஆம் தேதி அம்பாரியா கிராமத்தில் தூங்கிக்கொண்டிருந்த 62 வயது ஜினாபாய் பார்மர் என்பவரை சிங்கம் கடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.