புத்ராஜெயா, அக்டோபர் 29 – நேற்று அன்வார் இப்ராகிம் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, ‘சைஃபுலுக்கு நீதி’ என்ற வாசகமும் அவரது உருவமும் பொறிக்கப்பட்ட டி-சட்டைகளை நீதிமன்றத்துக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த காவல்துறை தடுப்பரணுக்கு அருகே சிலர் தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இச்செயலில் ஈடுபட்டவர்களை பிகேஆர் இளைஞர் பிரிவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் கண்டித்ததால் அங்கு கூச்சலும் குழப்பமும் நிலவியது.
எனினும் போலிசார் தலையிடுவதற்கு முன்பே அந்தக் களேபரம் உடனடியாக அடங்கி, அங்கு அமைதி திரும்பியது.
“அனைவரும் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்,” என பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் நிக் நஸ்மி நிக் அகமட் கேட்டுக் கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தவே டி-சட்டைகளை எரித்ததாக மைக்கேல் தமிழ் என்ற ஆதரவாளர் தெரிவித்தார்.
“எங்களுக்கான நீதிமன்றத்துக்குள்ளேயே எங்களை அனுமதிக்காத பட்சத்தில் வேறு எவ்வாறு எங்களது ஆதரவை வெளிப்படுத்த முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அன்வார் மீதான ஓரினச் சேர்க்கை உறவு தொடர்பிலான வழக்கு விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்தின் வெளியே நேற்று இவ்வாறான பரபரப்பு சூழ்நிலை நிலவியது. இவ்வழக்கின் விசாரணை வியாழக்கிழமை மீண்டும் தொடர உள்ளது.