கோலாலம்பூர் – 2018-ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு முழு அரச மன்னிப்பு வழங்கி அவர் விடுதலை செய்யப்பட்ட முடிவை எதிர்த்து வழக்கறிஞர் முகமட் கைருல் அசாம் அப்துல் அசிஸ் என்பவர் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார்.
மன்னிப்பு வாரியத்தையும், அன்வார் இப்ராகிமையும் அவர் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்கின் மனு இன்று மாலையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
16 மே 2018 தேதியிட்ட கடிதத்தின் வழி மன்னிப்பு வாரியம் மாமன்னருக்கு வழங்கிய ஆலோசனைக் கடிதத்தைக் குறிவைத்து இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினமே அன்வார் அவர் மீதான – சைபுல் புகாரி சுமத்தியிருந்த – ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியேறினார்.
அந்த காலகட்டத்தில் மன்னிப்பு வாரியம், முறைப்படியும் மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் அமைக்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர் கைருல் தனது மனுவில் வாதிட்டுள்ளார்.
தனது வழக்கின் மூலம் அன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பு இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் கைருல் அப்படியே அன்வாரின் தண்டனைக் காலம் மீது மன்னிப்பு வழங்கப்பட்டாலும், அவர் குற்றவாளிதான் என கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியுள்ளார்.
தனது மனுவில் அவர் வெற்றி பெற்றால், அன்வாரின் குற்றம் நிலைநிறுத்தப்பட்டால், அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அரசாங்கப் பதவியையோ வகிக்க முடியாத நிலைமை ஏற்படும்.
அன்வாருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் கைருல் அசாம் ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் தாய்மொழிப் பள்ளிகள் இருக்கக் கூடாது என்று வழக்கு தொடுத்தவராவார். சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளியில் சீனப்புத்தாண்டை முன்னிட்ட அலங்காரங்களுக்கு எதிராகவும் புகார் செய்தவராவார்.