புதுடெல்லி, அக்டோபர் 3 – கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், டெல்லி உயிரியல் பூங்காவில், மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவரை, வெள்ளைப் புலி கடித்துக் கொன்ற சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தடுப்பு வேலியை தாண்டிக் குதித்த அந்த 22 வயது வாலிபரின் அருகே சென்ற விஜய் என்ற அந்த வெள்ளைப் புலி, 15 நிமிடங்களாக அவரை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தது.
ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் அதன் மீது கல்லை எடுத்து எறிய ஆக்ரோஷமடைந்த புலி, சட்டென அந்த வாலிபரின் கழுத்தை கவ்விக் கொண்டு அங்கிருந்து சற்று தொலைவிற்கு கொண்டு சென்றது.
இதில் படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கசியும் புதிய தகவல்
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, புதிய தகவல் ஒன்று பேஸ்புக்கில் உலா வந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பொதுமக்கள் கல்லை எடுத்து எறிந்த போது அந்த புலி, வாலிபரைக் காப்பாற்றும் முயற்சியில் தான் கழுத்தைக் கவ்விக் கொண்டு சென்றது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கண்டறிப்பதாக அந்த தகவல் கூறுகின்றது.
வழக்கமாக, புலி தனது குட்டியை அவ்வாறு தான் தூக்கிச் செல்லும் என்றும், கழுத்தைக் கவ்வியதோடு அந்த புலி வாலிபரின் உடலில் எந்த ஒரு சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகின்றது.
கழுத்தில் ஆழமாக புலியின் பல் பதிந்து அதிக இரத்தம் வெளியேறியதால் தான் வாலிபர் உயிரிழந்துள்ளார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.
எனினும், அப்படி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை சம்பந்தப்பட்டவர்களால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.