கொழும்பு, நவம்பர் 4 – இலங்கைக் கடற்பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்படுவது சாதாரணமான நிகழ்வுதான். இதில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என சீனா, இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த செப்டம்பர் மாதம், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சீனாவின் நீர்மூழ்கிப் போர் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன.
மேலும், இந்தியாவை அச்சுறுத்தும் சீனாவின் இந்த நடவடிக்கை தொடர்கதையாகி வருகின்றது. இந்திய அரசு கடந்த வாரம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை அரசு அதனை பெரிதுபடுத்தவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து சீனப் பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாரசீக வளைகுடா, சொமாலியா கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களைக் கண்காணிக்கும் பணிக்காக இலங்கைத் துறைமுகத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.”
“கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவே இலங்கைத் துறைமுகத்தில் சீனப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. இது வழக்கமான நிகழ்வுதான். இதில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.