புதுடெல்லி, நவம்பர் 7 – பல்வேறு அனைத்துலக அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா, மியான்மர், பிஜி ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரத்தில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இது குறித்து நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மோடி கூறியதாவது;-
“நவம்பர் 11 முதல் 19-ஆம் தேதி இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சிறப்பு எனக்கு கிடைக்கிறது.”
“11-ஆம் தேதி முதல் இந்த மூன்று நாடுகளில் நடைபெறும் ஆசியான், கிழக்கு ஆசிய மாநாடு, ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்கிறேன்”.
“இந்த மாநாடுகளின்போது பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக விளங்கும். அதில் இந்தியாவுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது”.
“அதற்கு இந்த மாநாடுகள், நாட்டு தலைவர்களின் சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது” என மோடி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.