புதுடெல்லி, நவம்பர் 11 – தூய்மை இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் நடிகர் கமல்ஹாசனின் முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தி தினமான கடந்த அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினார் மோடி. அதில் இணைந்து செயல்படுமாறு கமல் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் தனக்கு அழைப்பு விடுத்ததைப் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட கமல்ஹாசன் தூய்மைப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் தனது பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதியன்று சென்னை அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் கமல். இந்த தூய்மைப் பணியில் அவரது நற்பணி மன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நரேந்திர மோடி கமலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது வலைத் தளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ளார்.
“நடிகர் கமல்ஹாசனின் இந்த சிறந்த முயற்சி மனதைத் தொடும் வகையில் அமைந்திருந்தது,” என்று அதில் மோடி குறிப்பிட்டுள்ளார்.