அனைத்துலக அளவில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் மிகச்சிறந்த பிரமுகர்கள், வல்லுனர்கள், தலைவர்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இதழான ‘பாரின் பாலிசி’ வெளியிட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான பட்டியலை தன் வாசகர்களிடம் இணையத்தள ஓட்டுப்பதிவு மூலம் இந்த இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவின் பாரின் பாலிசி, பிரிட்டனின் ப்ராஸ்பெக்ட் இதழ்கள் சேர்ந்து தான் முதன் முதலில் 2005 ஆம் ஆண்டில் உலக சிந்தனையாளர் பட்டியலை வெளியிட்டது.
பின், ஒவ்வொரு ஆண்டும் ‘பாரின் பாலிசி’ இதழ் வெளியிட்டது. இந்த இதழ் தன் வாசகர்களிடம் இணையத்தள ஓட்டுப்பதிவு நடத்தி இந்த பட்டியலை தொகுத்துள்ளது. பெரும்பாலும், அமெரிக்க, ஐரோப்பிய வாசகர்கள் தான் ஓட்டளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 64 வயதான மோடி, வசீகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கு சாதகமாக செயல்படும் தலைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கவர்ச்சிகரமான பிரச்சாரத்தை மோடி வெளிப்படுத்தினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக கட்சி ஆணித்தரமாக காலூன்ற காரணமான 50 வயதான அமித் ஷா, பிரச்சார இயந்திரமாக செயல்பட்டார். இதனால் அவரது பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவின் பெயரும் இப்பட்டியலில் உள்ளது. இந்தியாவின் கடன் தொடர்பான கடுமையான உண்மைகளை தெரிவித்ததற்காக அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இதில் இந்திய தேசிய போலியோபிளஸ் குழு நிர்வாகி தீபக் கபூர் கேம்பிரிட்ஜ் மருத்துவர் சங்கீதா பாடியா, சுற்றுச்சூழல் விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன், பொருளாதார நிபுணர் பார்த்தா தாஸ்குப்தா ஆகிய இந்தியர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.