புதுடெல்லி, நவம்பர் 18 – இந்தியாவில் தனது கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த ஏர் ஆசியா
திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது ஆகப் பெரிய பெரு
நகரமான புனேவிலிருந்து மேலும் 3 இடங்களுக்கு விமானங்களை இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி முதல் புனேவிலிருந்து சண்டிகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. இதே போல் ஜெய்பூர் மற்றும் கோவாவுக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
“நவம்பர் 30ஆம் தேதி முதல் பெங்களூரு – புனே – கோவா மற்றும் பெங்களூரு –
புனே – சண்டிகர் ஆகிய வழித்தடங்களில் ஏர் ஆசியா விமானங்கள் இயக்கப்படும்.
மேலும் பெங்களூரு – புனே – ஜெய்பூர் வழித்தடத்திலும் விமானங்களை இயக்க
ஏர் ஆசியா திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் தினந்தோறும் அந்நிறுவன
விமானங்கள் இயக்கப்படும்,” என்று புனே விமான நிலைய இயக்குநர் மனோஜ்குமார்
கங்கால் தெரிவித்தார்.
ஏர் ஆசியாவின் இந்த புதிய விமான சேவையால் சுற்றுலாத்துறை உடனடியாக
பயனடையும் என்று புனே பயண முகவர் சங்கத்தின் இயக்குநர் நிலேஷ் பன்சாலி
கருத்து தெரிவித்துள்ளார்.
“சிம்லா, குலுமனாலி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு மிக அருகில் உள்ள விமான
நிலையம் சண்டிகரில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“தற்போது கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சீராக
அதிகரித்து வருகிறது. கோவாவுக்கு 2 விமானங்களே இயக்கப்படும் நிலையில்,
கூடுதலாக இன்னொரு விமானச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் நிச்சயம் பலத்த
வரவேற்பு இருக்கும்,” என்று நிலேஷ் பன்சாலி மேலும் கூறியுள்ளார்.