பெய்ஜிங், நவம்பர் 18 – சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கேரட் சிப்பமிடுதல் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகி உள்ளனர்.
ஷாங்டாங் மாகாணத்தில் ஷவ்குவாங் நகரில் உள்ள லாங்யுவான் உணவு நிறுவனத்தின், உற்பத்திக்கூடம் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். எனினும், தீ உற்பத்திக்கூடம் முழுவதும் பரவலாகப் பரவியதால் பலர் கிடங்கிற்குள்ளேயே தீயில் சிக்கி பலியாகினர்.
இந்த கோர விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளதாகவும், 10-ம் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து குறித்து ஆலை மேலாளரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், தனியார் தொழிற்சாலைகள், பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.