புதுடில்லி – ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (படம்) மீது இந்தியாவின் மத்தியக் காவல் துறையினர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் விமான சேவைகளுக்கான அனுமதி பெற்றது தொடர்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனம் இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து 2014-இல் ஏர் ஆசியா இந்தியா என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தது.
ஏர் ஆசியாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து டில்லி, மும்பை நகர்களில் உள்ள அதன் அலுவலகங்கள் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டன.
மத்திய புலனாய்வுத் துறை எந்தக் கோணத்தில், எந்தக் காரணத்திற்காக ஏர் ஆசியா மீது விசாரணை நடத்தவிருக்கிறது என்பது போன்ற விவரங்களும் வெளியிடப்படவில்லை.
அண்மையில் 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக நஜிப்பையும் தேசிய முன்னணியையும் ஆதரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கிய டோனி பெர்னாண்டஸ் அதன் காரணமாக சர்ச்சைகளில் சிக்கியதோடு பொதுமக்களின் கடும் கண்டனங்களுக்கும் ஆளானார்.