Home தேர்தல்-14 “நெருக்கடியில் நான் வளைந்து கொடுத்தேன்” – டோனி பெர்னாண்டஸ் மன்னிப்பு கேட்டார்.

“நெருக்கடியில் நான் வளைந்து கொடுத்தேன்” – டோனி பெர்னாண்டஸ் மன்னிப்பு கேட்டார்.

1420
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கி வந்த வேளையில், தேசிய முன்னணிக்கு ஆதரவு தரும் வகையில் நடந்து கொண்டதற்காக மலேசியர்களிடம் ஏர் ஆசியா நிறுவனத் தலைவர் டோனி பெர்னாண்டஸ், இன்று தான் வெளியிட்ட காணொளி ஒன்றின் வழி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

“மலேசியர்களாகிய நீங்கள் என்ன நினைத்தீர்களோ, என்ன செய்தீர்களோ அதையேதான் நானும் செய்ய நினைத்தேன். ஆனால், எனக்கு பல்வேறு வழிகளில் நெருக்குதல்கள் தரப்பட்டன. அதன் காரணமாக, நான் வளைந்து கொடுத்து அவ்வாறு நடந்து கொள்ள நேர்ந்தது” என்று அந்த காணொளியில் டோனி பெர்னாண்டஸ் கூறியிருக்கிறார்.

வரலாற்றுபூர்வ முடிவை மலேசியர்கள் எடுத்த வேளையில் அவர்களோடு இணைந்து செயல்பட முடியாமல் போனதற்கும் டோனி வருத்தம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும்போது, எப்போதும் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் ஏர் ஆசியா விமானம் ஒன்றை தேசிய முன்னணியின் நிறமாகப் பார்க்கப்படும் நீல வண்ணத்திற்கு மாற்றி அது தொடர்பான புகைப்படங்களையும், காணொளிகளையும் டோனி பெர்னாண்டஸ் வெளியிட்டார்.

அதே வேளையில், நஜிப்புடன் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்வது போன்ற காணொளிகளும் வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இணைய, சமூக ஊடகங்களில் பொதுமக்கள் டோனி பெர்னாண்டசை கடுமையான கண்டனங்களோடு சாடினர்.

14-வது பொதுத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தேசிய முன்னணி சந்தித்தது. தன்மீது எழுந்த கண்டனங்களுக்கு பதில் கூறும் விதமாகத்தான் டோனி பெர்னாண்டஸ் இந்த காணொளியை வெளியிட்டிருக்கிறார்.