
கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் குறித்த விசாரணைகள் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அதன் தொடர்பில் தன்மீதும் விசாரணைகள் நடத்தப்படத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் காவல் துறைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் ‘பிரசரணா’ (Prasarana Malaysia Bhd) என்ற அரசாங்க நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பிரசரணா என்பது பொதுப் போக்குவரத்து தொடர்பான அனைத்து சொத்துடமைகளையும் நிர்வகிக்கும் – முழுக்க முழுக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமாகும்.
1எம்டிபி மீதான விசாரணைகள் தொடங்கப்பட்டபோது, அதில் ஈடுபட்ட ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் சிலர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதோடு, இடமாற்றமும் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டேல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அபாண்டி அலி நியமிக்கப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் நஜிப் மீது எந்தக் குற்றமும் இல்லை என அபாண்டி அலி அறிவித்தார்.