Home நாடு “இனி போர் இல்லை – இணைந்து நாட்டை நிர்மாணிப்போம்” – வேதமூர்த்தி

“இனி போர் இல்லை – இணைந்து நாட்டை நிர்மாணிப்போம்” – வேதமூர்த்தி

1232
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “தேசிய முன்னணி தோற்கடிக்கப்பட்டதோடு நமது போர் ஓய்ந்து விட்டது. இனி ஆளும் அரசாங்கத்தோடு மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு புதிய மலேசியாவை நிர்மாணிக்கப் புறப்பட்டிருக்கும் அணியினரோடு இணைந்து பணி செய்வோம்” என தனது சகோதரர் உதயகுமாருக்கு ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி அறைகூவல் விடுத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ‘ஹிண்ட்ராப் 2.0’ என்ற புதிய அமைப்பின் தலைவர் எனக் கூறிக் கொண்டு உதயகுமார் அரசு அமைப்புகளுக்கான மறுசீரமைப்புக் குழுவுக்கு கோரிக்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து வேதமூர்த்தி விடுத்த அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

“உதயகுமார் (படம்) வேண்டுமானால் ஹிண்ட்ராப் இயக்கத்தில் ஓர் உறுப்பினராகச் சேரலாம். ஆனால் அதே போன்ற பெயரைக் கொண்ட இயக்கத்தின் பிரதிநிதியாகக் காட்டிக் கொண்டு மக்களைக் குழப்புவது மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான, முழுமையான தீர்வுகளைக்  காண்பதற்கு எந்த வகையிலும் உதவாது” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் ஹிண்ட்ராப் எந்த கோரிக்கை மனுவையும் எந்த அமைப்பிடமும் வழங்கவில்லை என்பதையும் வேதமூர்த்தி உறுதிப்படுத்தினார்.

கடந்த 2 வருடங்களாக ‘தேசிய முன்னணிக்கு வாக்களிக்காதீர்கள்’ என்ற பிரச்சாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து கடந்த ஒரு வருடமாக பக்காத்தான் கூட்டணியின் வெற்றிக்காக துன் மகாதீருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியிருப்பதாகக் கூறியிருக்கும் வேதமூர்த்தி இதற்காக, 300 பிரச்சாரக் கூட்டங்களை தேசிய முன்னணியைத் தோற்கடிப்பதற்காக நடத்தியதாகவும் ஆனால் அதில் எதிலும் உதயகுமார் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதோடு, மகாதீருக்கோ, பக்காத்தான் கூட்டணிக்கோ ஆதரவையும் தெரிவிக்கவில்லை என்பதையும் வேதமூர்த்தி சுட்டிக் காட்டினார்.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரத்தில் மகாதீருடன் வேதமூர்த்தி

“எனவே, உதயகுமாருக்கு ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தேசிய முன்னணி தோற்கடிக்கப்பட்டதோடு நமது போர் ஓய்ந்து விட்டது. உதயகுமார் இனியும் தனது மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு புதிய மலேசியாவை நிர்மாணிக்கக் கடுமையாகப் பாடுபட்டு வரும் அனைவருடனும் உதயகுமார் கைகோர்க்க வேண்டும். பக்காத்தானை ஆதரித்து வெற்றி பெறச் செய்தவர்களைக் கொண்ட ஒரு புதிய சமுதாயத்தின் மூலம் புதிய மலேசியாவை நிர்மாணிக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஹிண்ட்ராப் மீதான தனது கடப்பாட்டை துன் மகாதீர் வழங்கியிருப்பதோடு, அவரோடும் மற்ற பக்காத்தான் தலைவர்களோடும் இணைந்து மக்களின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தில் அம்னோவுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த நிலைமை மாறி இப்போது நாம் முழுமையாக ஆதரித்த கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கும் நேரத்தில் மீண்டும் பக்காத்தான் அரசாங்கத்திற்கு எதிராக மோதல் போக்கைக் கொண்டு வருவது புத்திசாலித்தனமாகாது” என்றும் வேதமூர்த்தி நேற்று செவ்வாய்க்கிழமை (மே 29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.