Home நாடு “ஹிண்ட்ராப் கோரிக்கை மனு எதையும் வழங்கவில்லை” – வேதமூர்த்தி

“ஹிண்ட்ராப் கோரிக்கை மனு எதையும் வழங்கவில்லை” – வேதமூர்த்தி

1277
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை (மே 28) அரசு அமைப்புகளுக்கான மறுசீரமைப்புக் குழுவிடம் ஹிண்ட்ராப் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்ததாக ஹிண்ட்ராப் தலைவர்களில் பி.உதயகுமார் ஊடகங்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அத்தகைய கோரிக்கை மனு எதனையும் தாங்கள் பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்திடமோ, மூத்த மேதகையாளர்களின் குழுவிடமோ சமர்ப்பிக்கவில்லை என பி.வேதமூர்த்தி தலைமையிலான ஹிண்ட்ராப் இயக்கம் தெரிவித்தது.

உதயகுமார் ஹிண்ட்ராப் 2.0 என்ற இயக்கத்தின் பெயரில் இந்த கோரிக்கை மனுவை நேற்று சமர்ப்பித்திருந்தார்.

“2009-ஆம் ஆண்டு முதல் உதயகுமார் ஹிண்ட்ராப் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை காரணம் அவர் தனக்கென புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவிக்கப் பாடுபட்டார். அவர் மனித உரிமைக் கட்சியின் தலைவராவார். எனவே, ஹிண்ட்ராப் 2.0 என எந்த இயக்கமும் இல்லை. அவரது நடவடிக்கைகளால் மக்களிடையே குழப்பமும், வெறுப்பும், ஆத்திரமும் ஏற்பட்டிருக்கிறது” என்றும் வேதமூர்த்தி ஹிண்ட்ராப் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“போர் நடத்துவது என்பது ஓய்ந்து விட்டது. இனி புதிய மலேசியாவை நிர்மாணிக்க நாம் பாடுபட வேண்டிய நேரம் இது” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

“அம்னோ சார்பு ஊடகங்களில் உதயகுமார் சமர்ப்பித்த கோரிக்கை மனு குறித்த செய்திகள் பரவலாக வெளியிடப்பட்டிருக்கின்றன” என்றும் வேதமூர்த்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆனால், அம்னோ சார்பு அல்லாத பிரி மலேசியா டுடே, மலேசியாகினி போன்ற இணைய ஊடகங்களிலும் உதயகுமாரின் கோரிக்கை மனு குறித்த செய்திகள் விரிவாக வெளியிடப்பட்டிருக்கின்றன.