புதுடெல்லி, நவம்பர் 19 – மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் உட்பட நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் பிரணாப் முகர்ஜி
டெல்லியில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.
யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள இந்த நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் அவரது மகனும் கட்சித் துணைத் தலைவருமான ராகுல் காந்தியும் இன்று காலை வந்தனர்.
மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்களும் இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வையொட்டி மறைந்த இந்திரா காந்தியின் பதிவு செய்யப்பட்ட உரை அங்கு ஒலிபரப்பப்பட்டது. மேலும் மூவர்ணத்தினாலான பலூன்களும் தலைவர்களால் பறக்க விடப்பட்டன.
தமிழகத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்திக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1917ஆம் ஆண்டு, நவம்பர் 19ஆம் தேதி பிறந்த இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமரர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலர் மாலை வைக்கும் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி.
படங்கள் – EPA