கோலாலம்பூர், நவம்பர் 20 – மக்களைச் சந்திக்கும் நிகழ்வுக்காக வரும்போது தன்னிடம் நினைவு மலர்கள் மற்றும் பொருட்களை வழங்க வேண்டாம் என மாநிலத்தின் அனைத்து அரசுத் துறைகள் மற்றும் முகமையகங்களுக்கு (agency) சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின்
அலி உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் 13ஆம் தேதியிட்ட அவரது இந்த உத்தரவானது, அனைத்து துறைகள் மற்றும்
முகமையகங்களுக்கு அரசுச் செயலர் டத்தோ முகமட் குர்சின் முனாவி கையெழுத்துடன் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நினைவு மலருக்குப் பதிலாக அரசுத் துறைகள் மற்றும் முகமையகங்கள் தங்களது
நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் அல்லது அதேபோன்ற ஆவணங்களை அளித்தால்
போதும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமின் சகாக்கள் 8 பேருக்கு மாநில அரசு 2.6 மில்லியன் ரிங்கிட் தொகையை இழப்பீடாக அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அஸ்மின் அலி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி மந்திரி பெசாராக பதவியேற்றது முதல் மக்களைச்
சந்திப்பதற்கு தனது நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்கும் என்று அஸ்மின் அலி கூறி வருகிறார்.
அடித்தட்டு மக்களை அடிக்கடி சந்திக்கும் அதே நேரத்தில் சராசரி மக்களைப் போலவே உடை அணிய வேண்டும் என்றும் அஸ்மின் அலி விரும்புவதாகத் தெரிகிறது.
முன்னதாக இம்மாதத் தொடக்கத்தில் தனது செல்பேசி எண்ணை பொது மக்களுக்கும்
தெரிவித்த அஸ்மின் அலி, தங்களது பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாவிட்டால்
தனக்கு குறுந்தகவல்கள் அனுப்பலாம் எனத் தெரிவித்திருந்தார்.
மக்களுக்காற்றும் பணிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின்
செயல்பாடு தன்னைக் கவர்ந்திருப்பதாக அஸ்மின் அலி கூறியுள்ளார்.
“ஜோகோ விடோடோ தனது அலுவலகத்தில் 20 விழுக்காடு நேரத்தை மட்டுமே
செலவிடுவதாகவும் இதர பொழுதை மக்களைச் சந்திப்பதற்காக செலவிடுவதாகவும்
அவரை கடந்த ஆண்டு நேரில் சந்தித்தபோது என்னிடம் தெரிவித்தார். அவரைப்
போல் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மக்களுடன் தொடர்ந்து
தொடர்பில் இருந்து அவர்களின் தேவைகளை அறிந்துகொள்ள விரும்புகிறேன்,”
என்கிறார் அஸ்மின் அலி.