சென்னை, நவம்பர் 20 – பெரியார், அண்ணாவின் பிறந்த நாளை நாம் கொண்டாடுவது போல், தமிழர்களின் வரலாற்றில் வெளிச்சம் தரும் பிரபாகரன் பிறந்தநாளையும் தாய்த் தமிழகத்திலும், உலக மெங்கிலும் நாம் கொண்டாடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “உலக வரைபடத்தில் ரத்தக்கண்ணீர்த் துளியாகக் காட்சி அளிக்கும் இலங்கைத் தீவில், ஈழத்தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்கு மாகாணத்தில் வல்வெட்டித் துறையில் 1954 நவம்பர் 26ஆம் தேதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் எனும் இலட்சியத் தம்பதிக்கு பிறந்தவர் பிரபாகரன்”.
“ஈழத் தமிழ் இனம் சிங்களரால் தாக்கப்படுவதும், வதைக்கப்படுவதும் கண்டு இதயம் கொதித்து, சிங்களவனின் ஆதிக்கக் கொட்டத்தை ஒடுக்க தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழ தனது 15 ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ஆயுதம் ஏந்தினார்”.
“70களின் தொடக்கத்தில் புதிய புலிகள் எனும் ஈழ விடுதலை அமைப்பைத் தொடங்கினார். 1976 மே 5 ஆம் தேதி அன்று, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்றுவித்தார்”.
“விடுதலை இயக்கத்திலும் காணமுடியாத ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், அர்ப்பணிப்புத் தியாக உணர்வையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்படுத்தினார்”.
“லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ராஜபக்சேயின் சிங்கள ராணுவம் படுகொலை செய்தது. நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை கருப்பின மக்கள் கொண்டாடுவது போல், ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாளை அமெரிக்கர்கள் கொண்டாடுவதுபோல்”,
“தந்தை பெரியாரின் பிறந்த நாளையும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையும் நாம் கொண்டாடுவது போல், தமிழர்களின் வரலாற்றில் பேரொளி வெளிச்சம் தரும் பிரபாகரன் பிறந்த நாளையும் தாய்த் தமிழகத்திலும், உலக மெங்கிலும் நாம் கொண்டாடுவோம்”.
“உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்களே, புலம் பெயர்வாழ் ஈழ உறவுகளே. வரும் நவம்பர் 26-ஆம் தேதி அன்று அவர் பிறந்த நேரமான முன்னிரவு 7 மணி 18 நிமிடம் அளவில், தமிழகத்தில் கொண்டாடுவோம்”.
“நவம்பர் மாதம் 26-ஆம் தேதி அந்த நாட்டு நேரம்படி விழா எடுப்போம். வானவெளியில் வாண வேடிக்கைகள் நடக்கட்டும்; பட்டாசு வெடிகள் முழங்கட்டும்; சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படட்டும்; ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கின்றவர்கள் பூசை நடத்தட்டும்”.
“பிரபாகரனின் 60-வது பிறந்தநாள் விழாவில் தமிழர்கள் எழுப்பும் வாழ்த்து முழக்கம் விண்ணை முட்டட்டும். சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்குக் கட்டியம் கூறும் விதத்தில் தாய்த் தமிழகத்திலும், உலகம் எங்கிலும் தமிழர்கள் பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்” என வைகோ கூறியுள்ளார்.