கோலாலம்பூர், நவம்பர் 20 – உலக அளவில் ஆப்பிள், சாம்சுங் போன்ற ஒரு சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே திறன்கடிகாரங்களை உருவாக்கி வரும் நிலையில், சியாவுமியும் விரைவில் அந்த வரிசையில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளது.
திறன்பேசிகளுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலக அளவில் ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தினை சியாவுமி நிறுவனம் குறுகிய காலத்தில் பிடித்துவிட்டது.
2014-ம் ஆண்டிற்கான அதன் வளர்ச்சி மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இந்நிலையில், அந்நிறுவனம் திறன்பேசிகளுடன் சேர்ந்த திறன்கடிகாரங்களை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சியாவுமி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹுகோ பார்ரா கூறுகையில், “தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து துறைகளிலும் சியாவுமி கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்களுக்கு பல்வேறு ஆச்சரியங்களை எங்களால் ஏற்படுத்த முடியும். அவற்றில் தற்சமயம் மிக முக்கியமான ஒன்று திறன்கடிகாரங்கள். விரைவில் தொழில்நுட்பச் சந்தைகளில் எங்கள் நிறுவனத்தின் திறன்கடிகாரங்களை பார்க்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படும் சியாவுமி, ஏற்கனவே திறன்பேசிகளின் வர்த்தகத்தில் முக்கிய நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளித்து வரும் நிலையில், தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து துறைகளிலும் களம் இறங்க இருப்பது முன்னணி நிறுவனங்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.