இந்தியா, பிப்.27- உலகளவில் தீவிரவாத தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்ற பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
சமீபகாலமாக உலகளவில் பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில், உலகளவில் தீவிரவாத தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கபடுவது தெற்கு ஆசிய நாடுகள்தான் என்பதும், தீவிரவாத தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்ற பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது ஈராக், முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.
உலகிலேயே தீவிரவாதத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈராக்தான். அங்கு 2011ம் ஆண்டில் மட்டும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 1800 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே ஆண்டில் பாகிஸ்தானில் 1468 பேரும், ஆப்கானிஸ்தானில் 1293 பேரும், இந்தியாவில் 402 பேரும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது