டிசம்பர் 15 – தமிழ் நாட்டின் கலைஞர் தொலைக்காட்சியின் பாடல் திறன் போட்டி நிகழ்ச்சியான “இசை மேடை”யின் இறுதி கட்டப் போட்டி கோலாலம்பூரிலுள்ள பெட்டாலிங் ஜெயா சிவிட் சென்டரில் அண்மையில் அரங்கேறியது.
செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் ஏற்பாட்டில், ‘விடியல்’, மற்றும் “தமிழ் மலர்” நாளிதழ் ஆதரவில் நடைபெற்ற நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இடம் பெற்றது பிரபல உள்நாட்டுக் கலைஞர் இளவரசு நெடுமாறனுக்கு கலைஞர் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட ‘இசை முரசு’ விருதாகும்.
உள்நாட்டுக் கலை வளர்ச்சிக்காக இளவரசு நெடுமாறன் இதுகாறும் ஆற்றி வந்திருக்கும் பணிகள், சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, இந்த விருது வழங்கப்பட்டது.
இளவரசுவுக்கு வழங்கப்பட்ட விருது குறித்து அவருடன் செல்லியல் தகவல் ஊடகம் நடத்திய சந்திப்பின்போது, தனது இசை, கலைப் பணிகள் குறித்து இளவரசு விவரித்தார்.
இளமைக்கால இசைப் பயணம்
“மலேசியாவில் சிறு வயது முதல் கர்நாடக இசைப் பயிற்சியினை நாதஸ்வர வித்வான் திரு பழனிச்சாமி அவர்களிடம் கற்றேன். பின்னர் வேமன் இசை அகாடமியில் மேல்நாட்டு இசை பயிற்சியும் மேற்கொண்டேன். மிருதங்க வித்வான் சுப்பையா பத்தர் அவர்களிடமும் சிக்கல் கனகசபை அவர்களிடமும் மிருதங்கப் பயிற்சியையும் பெற்றுள்ளேன்.”
“1999ஆம் ஆண்டு எனது முதல் இசைத் தொகுப்பான “விடியல்” வெளியிடப்பட்டது. இதுவே என் இசைத் துறைக்கு முதல் நுழை வாயிலாக அமைந்தது. எனது ‘விடியல்’ இசைத் தொகுப்பில் இடம்பெற்ற பாடல்கள் மலேசிய வானொலியில் அதிக அளவு ஒளிபரப்பாகி இன்னமும் அடிக்கடி மறு ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சுமார் 16 இசைத்தொகுப்புகளுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது மட்டுமல்லாமல் வானொலி தொலைக்காட்சி, மேடை இலக்கிய நாடகங்கள் என 800 பாடல்களுக்கு மேல் இதுவரை இசை அமைத்திருக்கிறேன். அந்த வரிசையில் மேலும் 3 இசைத் தொகுப்புகளுக்கு தற்போது இசைப் பணி நடைபெற்று வருகிறது; கூடிய விரைவில் இம் மூன்றும் வெளிவரவுள்ளது”
-என இளவரசு தனது ஆரம்ப கால இசைப் பயணம் குறித்து விவரித்தார்.
கலைஞர் கருணாநிதிக்காக ஒரு பாடல்
“மலேசியாவில் நடைபெற்ற இந்திய கலைஞர்களுக்கான விருது (MIM) வழங்கும் நிகழ்வுக்கு தேர்வுக்குழுவில் நீதிபதியாகவும் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன். அதோடு அஸ்ட்ரோவின் பாடல் திறன் போட்டிக்கும் நீதிபதியாக பணியாற்றியிருக்கின்றேன்” என்றும் இளவரசு தெரிவித்தார்.
கலைஞர் தொலைக்காட்சியின் இசைமேடை என்னும் பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்று மலேசியாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
“இந்த நிகழ்வின்போது முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களைப் பற்றியும் அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டைப் பாராட்டியும் ஒரு பாடல் அரங்கேற்ற வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டபோது அந்தப் பாடலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டேன். என் தந்தையார் முரசு நெடுமாறன் அவர்கள் பாடலை இயற்றித் தந்தார். நான் அந்தப் பாடலுக்கு இசையமைத்து அல்லிமலர், துருவன் ஜீவா ஆகியோர் அந்தப் பாடலைப் பாடினார்கள். கலைஞரின் பாரட்டையும் இந்தப் பாடல் பெற்றது. இதைத் தொடர்ந்து என் இசைப் பணிக்கும் உள்நாட்டு தமிழிசைத் துறைக்கு நான் இதுவரை ஆற்றிய சேவையைப் பாராட்டி “இசை முரசு’ எனும் விருதை கலைஞர் தொலைக்காட்சியும் சென்னை லிபர்டி மீடியா நிறுவனமும் இணைந்து வழங்கி எனக்கு பெருமை சேர்த்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி” என்று இளவரசு மேலும் தெரிவித்தார்.
எனது குடும்பத்தினர் வழங்கிய ஆதரவு
“என் தந்தையாரின் முயற்சியால் நான் தமிழிசை கற்க நல்ல ஆசான் அமைந்தார், நல்ல மிருதங்க ஆசிரியர்கள் அமைந்தார்கள். என் தாயார் வழங்கிய ஊக்கமும் என்னை இத்துறையில் மென்மேலும் ஈடுபடத் தூண்டியது. ‘ஒரு நாள் இசைத் துறையில் கண்டிப்பாக நீ நல்ல பேர் வாங்குவாய்’ என்று அவர் அன்று சொன்னது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், கலைஞர் தொலைக்காட்சி வழங்கிய இந்த இசை முரசு என்ற விருது எனக்கு வழங்கப்படும் அந்த நாள் வந்தபோது அவர் இவ்வுலகில் இல்லை. இந்த விருதை முதலில் எனது தாயாரின் ஆத்மாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்” என இளவரசு தனது குடும்பம் தனக்கு வழங்கிய ஆதரவு குறித்து விவரித்தார்.
“இந்த விருது எனக்கு மட்டுமல்ல – அனைத்து மலேசியக் கலைஞர்களுக்கும் கிடைத்த ஓர் அங்கீகாரமாக கருதுகிறேன். உலகெங்கும் ஒளிபரப்பாகும் கலைஞர் தொலைக்காட்சியில் இவ்விருது வழங்கும் நிகழ்வு ஒளிபரப்பாகும் நிலையில் உலகெங்கும் உள்ள தமிழர்களின் முன்னிலையில் இவ்விருது வழங்கப்படுகிறது என்ற பெருமையை அனைத்து மலேசிய கலைஞர்களுக்கும் சமர்ப்பணம் செய்கின்றேன்”
“இப்பெருமையை எனக்கும், உள்நாட்டுத் தமிழிசைக்கும், உள்நாட்டு கலைக்கும் கொண்டு வந்து சேர்த்த சென்னை லிபர்டி மீடியா நிறுவனத்திற்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் என் மனமுவந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் இளவரசு தெரிவித்தார்.