Home நாடு இந்தியர் கட்சிகள் சமுதாய நலன் கருதி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் – நஜிப் அறைகூவல்

இந்தியர் கட்சிகள் சமுதாய நலன் கருதி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் – நஜிப் அறைகூவல்

1064
0
SHARE
Ad

செர்டாங், டிசம்பர் 14 – இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் இந்தியர் சமுதாய நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் ஒன்றிணைந்து பாடுபட முன்வர வேண்டுமென பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று வேண்டுகோள் விடுத்தார்.

najib

மொத்த மக்கள் தொகையில் 7.5 சதவீதமே இருந்தாலும் இந்தியர்களுக்காக மற்ற இனங்களை விட அதிகமான கட்சிகள் பிரதிநிதிக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார். இதன் காரணமாக, இந்திய சமுதாயத்திற்கென குறிப்பிடத்தக்க சில திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கத்திற்கு சிக்கலாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இன்று இங்கு நடைபெற்ற ஐபிஎஃப் கட்சியின் 22வது ஆண்டுப் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு நஜிப் தெரிவித்தார்.

“இதனைச் சொல்வது சுலபம் – செய்வது கடினம் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், இந்தியர் சார்பு கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை தீவிரமாக முன்மொழிய நான் விரும்புகின்றேன். அதன் காரணமாக இந்தியர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மேலும் வலுவுள்ளதாக இருப்பதை நம்மால் உறுதி செய்து கொள்ள முடியும்” என நஜிப் மேலும் கூறினார்

தற்போது தேசிய முன்னணியில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சியாக மஇகாவும், பிபிபி கட்சியும் உறுப்பியத்தோடு இணைந்திருக்கின்றன. ஐபிஎஃப், மக்கள் சக்தி, மலேசியன் இந்தியர் ஒற்றுமைக் கட்சி ஆகியவை தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

முன்பு மஇகாவின் உதவித் தலைவராக இருந்த டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனால் தொடங்கப்பட்ட ஐபிஎஃப் தற்போது டத்தோ சம்பந்தனைத் தலைவராகக் கொண்டு இயங்கி வருகின்றது.

மக்கள் சக்தி கட்சி டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் தலைமையில் இயங்கி வருகின்றது. மலேசிய இந்தியர் ஒற்றுமைக் கட்சி டத்தோஸ்ரீ கே.எஸ்.நல்லாவின் தலைமையின் கீழ் இயங்கி வருகின்றது.

தேசிய முன்னணியின் இணைய ஐபிஎப் முயற்சி?

IPF-Logoஇன்றைய ஐபிஎஃப் மாநாட்டில் பேசிய டத்தோ சம்பந்தன், தனது கட்சி தேசிய முன்னணியில் உறுப்பியக் கட்சியாக இடம்பெற வேண்டும் என விடுத்திருக்கும் வேண்டுகோள் குறித்துப் பேசிய நஜிப், தேசிய முன்னணி வேட்பாளர்கள் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய ஐபிஎஃப் கட்சி கடுமையாகப் பாடுபட்டு வந்துள்ளதை ஒப்புக் கொண்டார்.

“தேசிய முன்னணியில் இணைய வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் மிகுந்த அறைகூவல் எனது செவிகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அவர்களின் முயற்சியைக் கைவிட்டு விடக் கூடாது, காரணம் அரசியல் சூழ்நிலைகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கின்றன” என்றும் நஜிப் தனது உரையில் கூறினார்.

ஒரு கட்சியை தேசிய முன்னணியில் அனுமதிக்க, எல்லா கட்சிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் ஏதாவது ஒரு கட்சி மறுத்தாலும் ஒரு கட்சியை அனுமதிக்க முடியாது என்றும் தற்போது இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் நஜிப் எடுத்துக் கூறினார்.

ஐபிஎஃப் முழுமையாக தேசிய முன்னணியில் உறுப்பியம் பெற்ற கட்சியாக இல்லாவிட்டாலும் அதன் தேசிய முன்னணி உணர்வுகளும், ஈடுபாடும் மற்ற தேசிய முன்னணி கட்சிகளுக்கு இணையானதாகும் என்றும் நஜிப் பாராட்டு தெரிவித்தார்.

“காலப்போக்கில், அரசியல் அரங்கில் உண்மையாக தேவைப்படுவது ஒரு கட்சியின் அரசியல் பலம்தான் என்பதை மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகள் உணரும் நேரம் வரும்” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவை தேசிய முன்னணி பெறுவதற்கு ஐபிஎஃப் கட்சி கடுமையாகப் பாடுபட வேண்டும் என அவர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 1,200 பேராளர்களுக்கு நினைவுபடுத்தினார்.

சிறப்பு பொருளாதாரத் திட்டங்களின் மூலம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டை தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் தான் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அரசாங்க உதவிகள் பெற்றும், அமானா இக்தியார் மலேசியா திட்டம், உபகாரச் சம்பளங்கள், மெட்ரிகுலேஷன், மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் மூலமாகவும் வாழ்க்கையில் வெற்றியடைந்த தனிமனிதர்களான இந்தியர்களைப் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றைத் தான் நேரடியாக தயாரித்து வருவதாகவும், நஜிப் தெரிவித்தார்.

இன்றைய ஐபிஎஃப் மாநாட்டில் தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், மசீச உதவித் தலைவர் டத்தின் படுக்கா சியூ மெய் ஃபன், பிபிபி கட்சியின் உதவித் தலைவர் டத்தோ மெக்லின் டென்னிஸ் டி குருஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.