கோலாலம்பூர், டிசம்பர் 18 (மாலை 4.30 மணி) – சர்ச்சைக்குரிய மஇகா மத்திய செயலவையின் கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவுடன் தான் இந்தப் பிரச்சனை குறித்து கலந்து பேசியிருப்பதாகவும் அறிவித்தார்.
அதன் தொடர்பில் சங்கப் பதிவகத்துடன் சந்திப்பு ஒன்று நடத்தப்படும் என்றும், இதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்படும் என்றும் பழனிவேல் அறிவித்தார்.
ஒரு சிறு குழுவினர் மட்டுமே தன்னை பதவியிலிருந்து விலகச் சொல்வதாகவும், பெரும்பான்மையோர், தனக்கு இன்னும் ஆதரவாக இருப்பதால், தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும் பழனிவேல் அறிவித்துள்ளார்.
சங்கப் பதிவகம் விதித்த 90 நாட்கள் கெடுவுக்குள் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்றும் பழனிவேல் நம்பிக்கை தெரிவித்தார். கட்சியின் பதிவு ரத்தாகும் நிலைமை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.