கொழும்பு, ஜனவரி 2 – இலங்கை தேர்தலில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க, அந்நாட்டு அரசு இராணுவத்தைக் கொண்டு மிரட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இதுகுறித்து முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளரான மைத்ரிபாலா ஸ்ரீசேனா கூறியதாவது:- “அடுத்த வாரம் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ் வாக்காளர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்”.
“இந்நிலையில் அவர்களை வாக்களிக்க விடாமல் செய்யவும், தமிழர்கள் அதிகம் உள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாக்குப் பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும், யாழ்ப்பாணம், பொலனருவா உள்ளிட்ட இடங்களுக்கு 2,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை ராஜபக்சே அரசு அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.”
“இது தொடர்பாக தேர்தல் ஆணையருக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்த தேர்தல் பார்வையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.இதே கருத்தினை இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “இராணுவத்தினருடன், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலின் முடிவுகளை தமிழர்களின் வாக்குகள் தீர்மானிக்கும் என்பதால், இலங்கை அதிபர் ராஜபக்சேவும், எதிர்க் கட்சியினரும் கடந்த சில நாட்களாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.