Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘ஆம்பள’ – அப்படி ஒன்னும் அசத்தல!

திரைவிமர்சனம்: ‘ஆம்பள’ – அப்படி ஒன்னும் அசத்தல!

794
0
SHARE
Ad

vishal-aambala-tamil-movie-latest-posters (4)ஜனவரி 16 – ஹன்சிகா மோத்வானி, மாதவி லதா, மதூரிமா, நட்புக்காக ஆண்ட்ரியா, குத்தாட்டத்திற்கு பூனம் பாஜ்வா, ரம்யா கிருஷ்ணன், கிரண் ரத்தோட், ஐஸ்வர்யா என படத்தில் இத்தனை பெண்கள் இருக்க, அவர்களுக்கு முன் ‘ஆம்பளயாக’ எதிரிகளை பந்தாடுவதோடு, ஆட்டம் பாட்டம் என படம் முழுவதும் முஷ்டி முறுக்கி ஹீரோயிசம் காட்டுகிறார் விஷால்.

ஏற்கனவே தனது இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ‘மதகஜராஜா’ படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதால், அதே விஷால் கூட்டணியோடு இன்னொரு படம் எடுப்போமேனு சுந்தர் சி நினைத்திருப்பார் போல.

கதையை தயாரிக்க விஷால் ஃபிலிம் பேக்டரியே முந்திக் கொண்டு வந்ததும், அதே பழைய கதை, கவர்ச்சி குத்தாட்டம், பஞ்ச் வசனங்கள், ஜமீன் பரம்பரையின் குடும்பச் சண்டை என எல்லாவற்றையும் ஊற்றி ஒரு கலக்கு கலக்கி மசாலாவைத் தூவி, 2015 பொங்கலுக்கு பொங்க விட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த படத்திற்கு ‘தீயா வேலை செய்யணும் குமார்’, ‘இரும்புக் குதிரை’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ஹிப்ஹாப் தமிழா செய்திருக்கிறார்கள்.

கதைச் சுருக்கம்:

Aambala-Movie-Posters-13-620x330

ஊட்டியில் அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் விஷால், கல்லூரியில் படிக்கும் ஹன்சிகாவை காதலிக்கிறார். ஒரு சம்பவத்தில் இருவருக்கும் இடையே  ஊடல் ஏற்பட, அந்த சோகமான நேரத்தில் அம்மாவை விட்டுப் பிரிந்து போன தனது அப்பா பிரபுவையும், தம்பி சதீஷையும் பற்றிய உண்மை அவருக்கு தெரிய வருகின்றது. அவர்களைத் தேடி மதுரை செல்கிறார்.

மதுரைக்குப் போய் காலை உணவு சாப்பிட்டு முடிக்கும் முன்பே தன் அப்பா, தம்பியை மட்டுமல்ல, தனது அப்பாவின் காதலியின் மகன் வைபவ்வையும் கண்டு பிடித்து விடுகிறார்.

பிரபுவிற்கும் அவரது தங்கைகளான ரம்யா கிருஷ்ணன், கிரண் ரத்தோட், ஐஸ்வர்யா ஆகியோருக்கும் இடையே அவர்களின் தந்தை விஜயக்குமாரின் இறப்பில் இருந்து பல வருடங்களாக பகை. அதை தீர்க்க விஷால் கடுமையாகப் போராடுகிறார்.

தனது அத்தை ரம்யா கிருஷ்ணனின் எதிரிகளை தனது எதிரிகளாக நினைத்து துவைத்து எடுத்து அத்தை குடும்பத்தை காப்பாற்றுகிறார். திடீரென அத்தையுடனும் மல்லுக்கட்டுகிறார்.

இறுதியில் பிரிந்து இருந்த பிரபும், தங்கைகளும் ஒன்று சேர, அத்தை மகள்களான ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா ஆகிய மூவரையும் அண்ணன் தம்பிகளான விஷால், வைபவ், சதீஸ் ஆகியோர் திருமணம் செய்கிறார்கள்.

மீண்டும் ஒரு குத்துப்பாட்டு… இந்த முறை அத்தை மகள்கள் மட்டுமல்ல, அத்தைகளும் விஷாலுடன் அரை குறை ஆடைகளுடன் குத்தாட்டம் போடுகிறார்கள். முற்றும்.

ரசித்த காட்சிகள்:

Aambala-Photos-10

“தம்பி … உன் பின்னாடி தான் இவ்வளவு கூட்டம் இருக்கே… அரசியலுக்கு வரலாமே” என்றதும், அதற்கு விஷால், “சார்… நான் அரசியலுக்கு கூட்டம் சேர்க்கிறவன்… கூட்டத்தை வச்சு அரசியல் பண்றவன் இல்லை” என்று எடுத்த எடுப்பிலேயே நம்மை சுண்டி இழுக்கிறார். ஆனால்….

விஷால் ஹன்சிகாவோடு காதலாகும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், அதன் விளைவால் போலீஸ் அதிகாரியான சந்தானம் பதவி இழப்பதும், அதை சோகத்துடன் விஷாலிடம் சந்தானம் விளக்குவதும் சுந்தர் சி-ன் கைவண்ணம்.

“எங்க காதல ஊரே பட்டாசு வெடிச்சு கொண்டாடிச்சு” என்று விஷால் சந்தானத்திடம் கூற, “டேய் வெடிச்சது பட்டாசு இல்லடா போலீஸ் ஸ்டேசன் டா” என்று சந்தானம் சொல்லும் காட்சிகள் வயிறு சிரிக்க வைக்கும் இடங்கள்…

அதன் பிறகு, படம் முழுவதும் நம்மை சிரிக்க வைப்பது சதீஸ், வைபவ் இருவரும் தான். சந்தானம் இரண்டாம் பாதியில் வந்து நம்மை சிரிக்க வைக்க என்னென்னவோ முயற்சி செய்கிறார். ஆனால் சிரிக்க தான் முடியவில்லை.

சண்டைக்காட்சிகளும், அதன் பின்னால் ஒலிக்கும் பின்னணி இசையும் சோர்ந்து போன நம்மை சற்றே நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

சில கேள்விகள்:

image

விஷால் இன்னும் எத்தனை படங்களில் இப்படி முஷ்டி முறுக்கிக் கொண்டு திரியப் போகிறார் என்று தெரியவில்லை. கடைசியாக அவர் வித்தியாசமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்த படம் ‘நான் சிகப்பு மனிதன்’.

தீபாவளிக்கு போட்ட ‘பூஜை’ யின் தாக்கமே இன்னும் தீராத நிலையில் பொங்கலுக்கு ‘ஆம்பளயாக’ களம் இறங்கி இருக்கிறார் விஷால். அடுத்த படமாவது கொஞ்சம் இந்த மசாலா கிசாலாவையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு டயட்டுக்கு மாறுவாரா?

வழக்கமா தனது மசாலாப் படங்கள்ல பாட்டுல தான் கொஞ்சம் கவர்ச்சி வைப்பார் இயக்குநர் சுந்தர் சி…ஆனால் ஆம்பளன்னு இந்த படத்திற்கு பேரு வச்சதினாலயோ என்னவோ ஹன்சிகாவை காட்டு காட்டுன்னு காட்டியிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் ஹன்சிகா நடந்து போகும் போது ஹீரோ விஷால் அப்பட்டமாக ஹன்சிகாவின் பின்னழகைப் பார்த்து ரசிப்பதும், “டேய் இவங்க உங்க அத்தை பொண்ணுங்க இல்லை அத்தைங்க” என்று பிரபு கூற “பரவாயில்லை பா…” என்று சதீஸ் பல்லை இளிப்பதும், படத்தின் இறுதிக் காட்சியில் ஒட்டுமொத்த பெண்களும் சேர்ந்து குத்தாட்டம் போடுவதும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமா?

விஷாலின் குரலுக்கு சற்றும் பொருந்தாத குரலில் பாடல்களும், சிரிப்பே வராத சந்தானத்தின் பின்பாதி காமெடிகளும், லாஜிக்கே இல்லாத ஹீரோயிசங்களும் எப்படா படம் முடியும்? என்று மணி பார்க்க வைக்கின்றது.

மொத்தத்தில் ‘ஆம்பள’ யாருக்கான படம்?

விஷால் ரசிகர்களாக இருந்தால் கார்கள் பறக்கும் சண்டைக் காட்சிகளுக்கு உத்திரவாதம்…

சந்தானம் ரசிகர்களாக இருந்தால் முதல் பாதியில் நகைச்சுவையும், இரண்டாம் பாதியில் சிகை அழகையும் ரசித்துவிட்டு வரலாம்.

கிளுகிளுப்பு காட்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் ‘ஆம்பள’ படத்தில் நிறைய பெண்கள்… ஆனால் குடும்பத்துடன் சென்று பார்த்தால் நெளிய வேண்டியது வரும்…

மற்றபடி… ‘ஆம்பள’ – அப்படி ஒன்னும் அசத்தல.

– செல்லியல் விமர்சனக் குழு