ஜோர்ஜ்டவுன், ஜனவரி 16 – அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள காப்பரல் சைருல் அசார் ஓமரை நாடு கடத்த ஆஸ்திரேலியா மறுக்கும் பட்சத்தில், அந்நாட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தொடர்வது குறித்து மலேசிய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டரசு நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதால் சைருல் நாடு கடத்தப்பட வேண்டியது அவசியம் என மலேசிய அரசு கருதுவதாக உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனைடி ஜாஃபர் (படம்) தெரிவித்துள்ளார்.
“மலேசிய நீதித்துறை விவகாரங்களில் ஆஸ்திரேலிய அரசு குறுக்கிடக் கூடாது. எங்களைப் பொறுத்தவரையில் சைருல் நாடு கடத்தப்பட வேண்டுமென கருதுகிறோம். இதற்காக அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும்,” என்றார் வான் ஜூனைடி.
முன்னதாக சைருலை நாடு கடத்த ஆஸ்திரேலிய அரசு மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியானது. கடந்த நவம்பர் முதல் சைருல் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் தூக்குத் தண்டனை இல்லாத காரணத்தால், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக ஒருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றுவதில்லை என்பதை ஆஸ்திரேலியா நடைமுறையாகக் கொண்டுள்ளது.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதற்கு முன்பு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சைருல் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என அவரது வழக்கறிஞர் கமாருல் கமாருடின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சைருலுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது கூட்டரசு நீதிமன்றம்.