Home நாடு மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சோதிநாதன் நீக்கப்பட்டது ஏன்?

மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சோதிநாதன் நீக்கப்பட்டது ஏன்?

570
0
SHARE
Ad

Sothinathanகோலாம்பூர், ஜனவரி 31 – தனக்கு எதிராக கிளம்பியிருக்கும் எதிர்ப்புகளை சமாளிக்கும் விதமாக, சில மாநிலத் தலைவர் மாற்றங்களை செய்திருக்கும் பழனிவேல், நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதனை நீக்கியிருப்பது கட்சி வட்டாரங்களில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம், தற்போது ஏற்பட்டுள்ள கட்சிப் போராட்டத்தில் பழனிவேலுவுக்கு ஆதரவாக நிற்பவர் சோதிநாதன்.

இந்நிலையில் அவரை ஏன் பழனிவேல் நீக்கியிருக்கின்றார் என்ற கேள்வியும் மஇகா வட்டாரங்களில் எழுந்தது இயல்புதான்!

#TamilSchoolmychoice

மாநிலத் தலைவராகத் தொடர விரும்பாத சோதி

கடந்த கட்சித் தேர்தலில் வென்ற மூன்று உதவித் தலைவர்களுக்கும் மாநிலத் தலைமைகளை வழங்கும் நோக்கத்தில்தான் பழனிவேல், சோதிநாதனுக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைமையை வழங்கியிருந்தார்.

ஆனால், ஆரம்பம் முதற்கொண்டே அந்த நியமனத்தின் மீது சோதிநாதனுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகின்றது. காரணம், தேசிய நிலையில் அரசியல் பணியாற்றுவதிலும், தனது உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொண்டு, அடுத்த கட்டமாக, தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான காய்களை நகர்த்துவதிலும் மட்டுமே சோதிக்கு ஆர்வம் இருந்ததாக அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், பிளவுபட்டுக் கிடக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தொகுதிகளை ஒன்றிணைப்பதிலும், அவர்களோடு இணைந்து பணியாற்றுவதிலும் சோதி மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வந்தார் என்றும் நெகிரி மஇகா வட்டாரங்கள் கூறுகின்றன.

காலஞ்சென்ற முன்னாள் தலைவர் டத்தோ ராஜகோபாலு இருந்த வரையில் அவர் சோதிநாதனுக்கு எதிர்ப்புகளைக் காட்டி வந்தார். அதோடு, தற்போது எழுந்திருக்கும் உட்கட்சிப் போராட்டத்தில் கணிசமான தொகுதிகளும், கிளைகளும், சுப்ரா, சரவணன் பக்கம் சார்ந்திருப்பதால், அதனாலும் சோதிநாதன் மாநிலத் தலைவர் பதவியை வகிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.

மேலும், மஇகாவில் மறுதேர்தல் நடந்தால், மீண்டும் உதவித் தலைவராக முதலாவதாக வென்று காட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையிலும் சோதி இருக்கின்றார். இதனால், தேசிய நிலையிலான பிரச்சாரங்களைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தன்னை மாநிலத் தலைவர் பதவியிலிரந்து விடுவிக்கும்படி நீண்ட காலமாகவே பழனிவேலுவிடம் கூறிவந்தார் என்றும் மஇகாவினர் தெரிவிக்கின்றனர்.

இதற்காக தருணம் பார்த்துக் காத்திருந்த பழனிவேல், கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சரவணனை நீக்க முடிவு செய்தபோது, அவரோடு சேர்த்து தனது நெருங்கிய ஆதரவாளராக இருக்கும் சோதியையும் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டால், அதனால் சரவணனின் நீக்கம் குறித்த சர்ச்சையும் அப்படியே அமுங்கி விடும் என்று எதிர்பார்த்தார்.

தனக்கு எதிராக செயல்படும் சரவணனை மட்டுமல்ல, எனக்கு நெருங்கிய ஆதரவாளரான சோதிநாதனும்தான் நீக்கப்படுகின்றார்,

எனவே இது வழக்கமான, தேசியத் தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட மாற்றங்கள்தான் என்று சொல்லிக் கொள்ளலாம், கட்சியிலும் பெரிய அளவுக்கு சலசலப்புகள் ஏற்படாது என பழனிவேல் கணக்குப் போட்டுதான்,

சரவணனை நீக்கிய அதே தருணத்தில் சோதியையும் நீக்கி விட்டார் என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், எதிர்பாராத விதமாக, சரவணன் மாநிலத் தலைவர் நீக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல், சட்டரீதியான காரணங்களைக் காட்டி – மஇகா சட்டவிதிகளை மேற்கோள் காட்டி – போர்க்கொடியை உயர்த்த,

அதே வேளையில், பாதுகாவலர்கள் போர்வையில், ஒரு கும்பல் மஇகா தலைமையகத்தில் தடுப்புக்காவல்கள் போட்டு ஆக்கிரமிக்க, அதனை சரவணன் ஆதரவாளர்களும், மஇகா இளைஞர் பகுதியினரும் எதிர்த்து, தலைமையகப் பாதுகாப்பைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர,

பழனிவேலுவின் மாநிலத் தலைவர்கள் மாற்றம் நேர் தலைகீழ் மாற்றமாக, திசை மாறி எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிட்டது.

சரவணனை நீக்கியதால், இன்றைக்கு மஇகா மறுதேர்தல் போராட்டம், பழனிவேலுவின் தலைமையே வேண்டாம் என்ற போராட்டமாக உருமாறிவிட்டது.

பேராக் மாநிலத்திலும் மொத்தமுள்ள 24 தொகுதிளில், 19 தொகுதித் தலைவர்கள் முன்னாள் தலைவர், டத்தோ ராஜூ மற்றும் டத்தோ இளங்கோ தலைமையில் கூடி, பழனிவேல் நியமனம் செய்த டான்ஸ்ரீ ராமசாமியை மாநிலத் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என முழங்கி விட்டனர்.

இப்படியாக, முறையான ஆலோசனை, அரசியல் வியூகமின்றி பழனிவேல் செய்த மாநிலத் தலைவர் மாற்றங்கள் அவருக்கே எதிரான, அரசியல் போராட்டமாக விஸ்வரூபமெடுத்துவிட்டது.