புதுடெல்லி, ஜனவரி 31 – கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை மற்றும் நிர்வாகத்தில் இருந்து சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் விலகி உள்ளார்.
ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்துடன் அவர் ஏற்கனவே கூறியிருந்த ஒப்பந்தத்தின் படி, அந்நிறுவனத்தின் நிறுவனரான அஜய் சிங்கிற்கு அனைத்து உரிமைகளும் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான ஒப்புதலை ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது.
விமான நிறுவனங்களுள் ஒன்றான ஸ்பைஸ்ஜெட், கடந்த சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
எண்ணெய் நிறுவனங்களின் நெருக்கடி, விமான சேவை கட்டுப்பாட்டு அமைப்பின் கெடுபிடிகள் உள்ளிட்ட காரணங்களால், கடந்த மாதம் சுமார் 1800 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், கலாநிதி மாறன் தனது சன் குழுமத்தின் கிளை நிறுவனமான கே.ஏ.எல் ஏர்வேஸ், மூலம் ஸ்பைஸ்ஜெட்டில் நிறுவனத்தில் இருந்த தனது 58.46 சதவீத பங்குகளையும், அஜய் சிங்கிற்கு விற்க முடிவு செய்தார்.
அதனை அஜய் சிங்கும், ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தினரும் ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பங்கு விற்பனை மற்றும் கொள்முதலுக்கான ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை கையெழுத்தானது.
அதன் பின்னர் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து கலாநிதி மாறன், காவேரி மாறன் மற்றும் எஸ். நட்ராஜன் ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர்.
கலாநிதிமாறன் விலகியதால், இதுவரை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம், டெல்லிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.