கோலாலம்பூர், பிப். 16 – மஇகாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏ.சக்திவேல், செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ வி.மோகன் ஆகிய மூவரையும் ஓராண்டு காலத்திற்கு நீக்கியுள்ளதை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 13ஆம் தேதி, மஇகா தலைமையகத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு தேர்வான மத்திய செயலவையின் சட்டவிரோத கூட்டம், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றுள்ளது என்றும், இதற்கான அனுமதி கோரும் கடிதம் ஒன்று கடந்த 11ஆம் தேதி, மஇகா தலைமைச் செயலாளர் என்று குறிப்பிட்டு சக்திவேலுக்கு முகவரியிடப்பட்டுள்ளதாகவும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
“அந்த அனுமதி கோரும் கடிதத்தில் தனிநபர்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் என தன்னைக் கூறிக் கொள்ளும் சக்திவேல், பொருளாளர் என்ற பெயரில் டத்தோ ஜஸ்பால் சிங், தகவல் அதிகாரி என்ற பெயரில் டத்தோ வி.மோகன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். இவர்கள் மஇகா நலனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர் என்பது அவர்களின் இந்நடவடிக்கையின் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றித் தெரியவந்துள்ளது,” என அறிக்கை ஒன்றில் பழனிவேல் கூறியுள்ளார்.
கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதம் மூவருக்கும் அனுப்பப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அக்கடிதம் அவர்களுக்கு விரைவில் கிடைக்கப் பெறும் என்றார்.
“உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதால், மஇகா அரசியல் சாசனத்தின்படி மூவரும் கட்சி உறுப்பினருக்குரிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட இயலாது. கட்சித் தலைவருக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி மஇகா தலைமைச் செயலாளராக டத்தோ சோதிநாதனையும், பொருளாளராக டத்தோ முருகேசனையும், தகவல் அதிகாரியாக சிவசுப்ரமணியத்தையும் நியமித்துள்ளேன்,” என பழனிவேல் மேலும் தெரிவித்துள்ளார்.