Home வணிகம்/தொழில் நுட்பம் ஆப்பிளிடம் உலக சந்தையை இழந்த சாம்சுங்!

ஆப்பிளிடம் உலக சந்தையை இழந்த சாம்சுங்!

556
0
SHARE
Ad

apple-iphoneகோலாலம்பூர், மார்ச் 5 – கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக சாம்சுங், ஆப்பிள் நிறுவனத்திடம் திறன்பேசிகளுக்கான உலக சந்தையை இழந்துள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் உலக அளவில் ஆப்பிள் அதிக திறன்பேசிகளை விற்பனை செய்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கார்ட்னர் நிறுவனம், சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன் படி நான்காம் காலாண்டின் முடிவில் ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் 49 சதவீத உயர்வைப் பெற்றுள்ளது. சாம்சுங்கை பொருத்தவரையில் கடந்த ஆண்டை விட சுமார் 12 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டின் முடிவில், ஐபோன் 6-களால் ஆப்பிளின் இலாபம் மட்டும் 18 பில்லியன் டாலர்கள் என கூறப்பட்டது.  ஒரு தொழில்நுட்ப நிறுவனம் அடைந்த இந்த இலாபம் உலக நிறுவனங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சாம்சுங், ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் தனது வர்த்தக சரிவு சதவீதங்களை அறிவித்தது.

#TamilSchoolmychoice

இது குறித்து கார்ட்னர் நிறுவனத்தின் முக்கிய பகுப்பாய்வாளர் அன்ஷுல் குப்தா கூறுகையில், “2013-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குப் பிறகு சாம்சுங் தனது வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையாக போராடி வருகிறது. எனினும், அந்நிறுவனத்தால் இதுவரை எழுச்சி பெற முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

சாம்சுங் தனது வர்த்தகத்தை முன்னணி நிறுவனமான ஆப்பிளிடம் இழந்தது மட்டுமல்லாமல் தனது இடத்தை தக்க வைக்க சியோமி மற்றும் ஹவாய் போன்ற நிறுவனங்களுடனும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.