கோலாலம்பூர், ஏப்ரல் 12 – ஷெல் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, மலேசியாவின் சைபர் ஜெயாவில் இருந்து இந்திய நகரமான பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
இது தொடர்பாக ஷெல் குழுமத்தின் தலைவர் இயன் லூ கூறுகையில், “சைபர்ஜெயாவில் இருக்கும் எங்களின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இடமாற்றம் செய்யப்பட இருக்கின்றது. எனினும், எங்களின் மற்ற செயல்பாடுகள் இங்கு தொடரும். எங்களின் செயல்பாடுகளில் கூடுதல் மதிப்பு சேர்ப்பதற்காக இந்த இடமாற்றத்தை மேற்கொள்ள இருக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத்திற்கு சாதகமான களமும், உலகளாவிய பார்வையும் அமைந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.
இந்த இடமாற்றம் காரணமாக, ஷெல் தகவல் தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள் சுமார் 850 பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி ஷெல் நிறுவனம் எவ்வித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. எனினும், இடமாற்றம் செய்வது பற்றி அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:-
“மலேசியாவில் சுமார் 120 வருடங்களாக செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனம், நாட்டின் பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்புகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது. இனி வரும் காலங்களிலும் அது தொடரும். தற்போதய இடமாற்றத்தினால், எங்கள் நிறுவனத்தின் முதலீடுகளோ, சேவைகளிலோ எவ்வித மாறுபாடும் இருக்காது” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஷெல் நிறுவனத்தின் இந்த இடமாற்றத்திற்கு ரிங்கிட்டின் சரிவும், எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் முக்கிய காரணங்களாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.