Home One Line P2 ஹைட்ரஜன் எரிபொருள்வாயு விமானம் உருவாக்க, பில் கேட்ஸ், ஷெல், அமேசோன் இணைகின்றனர்

ஹைட்ரஜன் எரிபொருள்வாயு விமானம் உருவாக்க, பில் கேட்ஸ், ஷெல், அமேசோன் இணைகின்றனர்

929
0
SHARE
Ad

இலண்டன் : தற்போது பெட்ரோலியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் விமானங்கள் அடுத்த கட்ட தொழில்நுட்பத்தில் ஹைட்ரஜன் எனப்படும் நீரக வாயுவை எரிபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட முயற்சிகள் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கும் நிறுவனம் ஒன்று இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது.

இதன் மூலம் கார்பன் எனப்படும் கரியமில வாயு வெளியேற்றம் விமானப் பயணங்களின் மூலம் அறவே ஏற்படாது.

#TamilSchoolmychoice

சீரோஅவியா (ZeroAvia) என்ற இந்த நிறுவனம் ஹைட்ரஜன், மின்சாரம் இணைந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எரிபொருளை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் விமானங்களை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதற்காக 21.4 மில்லியன் முதலீட்டை அவர்கள் திரட்டியிருக்கின்றனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் ஜெப் பெசாசை உரிமையாளராகக் கொண்ட அமேசோன், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், பெட்ரோலிய நிறுவனமான ஷெல் ஆகிய மூன்று தரப்புகளும் இந்தத் திட்டத்திற்காக ஒன்றிணைந்திருப்பதுதான்.

சீரோஅவியா நிறுவனம் பிரிட்டன் அரசாங்கத்திடம் இருந்தும் 16.3 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்த நிதியைக் கொண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் ஹைட்ரஜன் எரிபொருள் விமானங்களைப் பயன்படுத்துவது துரிதப்படுத்தப்படும்.

ஆக ஆரம்பித்து 3 வருடங்களான சீரோஅவியா நிறுவனம் ஒரே வாரத்தில் 37.7 மில்லியன் முதலீட்டைத் திரட்டியுள்ளது.

பெட்ரோலிய எரிபொருளைப் பயன்படுத்தும் விமானங்களால் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மாற்று எரிபொருள் பயன்பாடுகளை அடையாளம் காணும் நெருக்கடி விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன.

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்ட முதல் விமானப் பயணத்தை சீரோஅவியா இந்த ஆண்டு செப்டம்பரில் மேற்கொண்டது. 6 பேர் அமர்ந்து செல்லக்கூடியதாக அந்த விமானப் பயணம் அமைந்தது.

சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அந்த விமானப் பயணம் நீடித்தது. சீரோஅவியா நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் அமைந்திருக்கும் இங்கிலாந்திலுள்ள கிரான்பீல்ட் என்ற இடத்தில் அந்த விமானப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த 3 மாதங்களில் 250 மைல் தூரமுள்ள பயணத்தை மேற்கொள்ள சீரோஅவியா திட்டமிட்டுள்ளது. ஏறத்தாழ இலண்டனிலிருந்து, பாரிஸ் வரைக்குமான தூரமாகும் இது.

சீரோஅவியா மேம்படுத்தியுள்ள தொழில்நுட்பம் 2023-ஆம் ஆண்டுக்குள் வணிகமயமாக்கப்படும். முதல் கட்டமாக 20 இருக்கைகளுடன் கூடிய 500 மைல் தூரப் பயணங்கள் மேற்கொள்ளப்படும்.

அடுத்த கட்டமாக 100 இருக்கைகளுடன் கூடிய 1,000 மைல் தூரத்தைக் கடக்கக்கூடிய விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படும்.

சுமார் 10 விமான நிறுவனங்கள் 2023-இல் சீரோஅவியா  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.