பாரிஸ், ஏப்ரல் 12 -இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்க விரும்புவதாக ஏர்பஸ் நிறுவனத்தின் தலைவர் டாம் என்டர்ஸ் இந்தியப் பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் பிரான்கோயிசை சந்தித்து இரு நாடுகளின் நட்புறவு, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அதன் பின்னர், அவர் நேற்று, டூலூஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏர்பஸ் விமான தொழிற்சாலையை பார்வையிட்டார்.
அங்கு ஏர்பஸ் குழுமத்தின் தலைவர் டாம் என்டர்ஸை சந்தித்த மோடி, இந்தியாவில் ஏர்பஸ் விமானங்களைத் தயாரிக்க அழைப்பு விடுத்தார். மோடி அழைப்பை ஏற்றுக்கொண்ட டாம், இந்தியாவுடனான வர்த்தகத்தில் தாங்கள் எப்போதும் ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மோடியின் வருகை தொடர்பாக டாம் என்டர்ஸ் கூறியதாவது:-
“எங்கள் நிறுவனத்திற்கு இந்திய பிரதமர் மோடி வருகை தந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், கவுரவத்தையும் அளித்துள்ளது. இந்தியாவுடன் வலுவான தொழில் பிணைப்பு வைத்துக் கொள்ளும் எங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தோம். எங்கள் அனைத்துலக செயல்பாடுகளில் இந்தியா, ஏற்கனவே முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனை மேலும் அதிகரிக்க விரும்புகின்றோம்”
“மோடியின் கனவுத் திட்டமான ‘மேக் இன் இந்தியா’ (Make in India)-ன் அழைப்பை ஏற்க நாங்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.
ஏர்பஸ் நிறுவனம், இதுவரை இந்தியாவில் ‘அயலாக்க சேவை’ (Outsourcing Service)-க்காக சுமார் 400 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து வந்தது. அதனை அடுத்த 5 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.