புது டெல்லி, ஜூன் 30 – தைவானைச் சேர்ந்த பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான எச்டிசி, இந்தியப் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ‘மேக் இன் இந்தியா’-ல் தன்னை இணைத்துக் கொண்டது. ஏற்கனவே உலகின் முன்னணி நிறுவனமான சாம்சுங், இந்த திட்டத்தில் இணைவதாக அறிவித்துள்ள நிலையில், எச்டிசி-யின் அறிவிப்பு இந்திய தொழில்நுட்பத் துறையில் அதிரடி மாற்றத்திற்கான முதற்படியாகப் பார்க்கப்படுகிறது.
ஸென் திறன்பேசிகளை உற்பத்தி செய்த ‘குளோபல் டிவைஸ் நெட்வொர்க்’ (Global Device Network) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள எச்டிசி நிறுவனம், இந்தியாவின் நொய்டா பகுதியில் ஏற்கனவே திறன்பேசிகளின் உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. இங்கு உற்பத்தியாகும் திறன்பேசிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகச் சந்தைகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே எச்டிசி நிறுவனத்தின் திறன்பேசிகள் இந்தியாவில் உற்பத்தி ஆவதால், அதன் விலையிலும் அதிரடி மாற்றம் நிகழலாம் என்று கூறப்படுகிறது. இங்கு அடிப்படையான எச்டிசி செல்பேசிகளில் இருந்து முன்னணி ரகத் திறன்பேசிகள் வரை உற்பத்தி செய்யப்படுவதால், இந்தியாவில் தங்களது நிறுவனம் பெரும் வளர்ச்சியைப் பெற வாய்ப்புள்ளதாக எச்டிசி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சாம்சுங் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கி உள்ள நிலையில், எச்டிசி மட்டுமல்லாமல் சீனாவின் சியாவுமி, ஹவாய் மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்களும் இத்திட்டத்தில் இணையக் காத்திருக்கின்றன.
இந்தியச் சந்தைகளை வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் முற்றுகையிட மிக முக்கியக் காரணம், கடந்த சில வருடங்களாக இந்தியாவில் திறன்பேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதால் தான் என டெலிகாம் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெயந்த் கொல்லா தெரிவித்துள்ளார்.