துனிஸ், ஜூன் 30 – துனிசியா நாட்டில் உள்ள கடற்கரையோர ஓய்வு விடுதியருகே தீவிரவாதியின் வெறியாட்டத்தால் 38 பேர் துடிதுடித்துப் பலியான இடத்தில் சுற்றுலாப்பயணிகள் தம்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியாவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சவ்ஸி கடற்கரைப் பகுதி உள்நாட்டினர் மற்றும் ஐரோப்பிய நாட்டினர் தேடிவந்து தங்கி இளைப்பாறும் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகின்றது.
இங்குள்ள இம்ப்ரியல் மர்ஹபா தங்கும் விடுதி பகுதியில் நேற்று முன்தினம் திடீரெனப் புகுந்த ஒரு தீவிரவாதி, அங்கு கூடியிருந்த மக்களின் மீது இயந்திரத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டான்.
இதில் துனிசியா, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 38 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இறந்து போனவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி மலர்களைத் தூவிப் பலர் பிரார்த்தனை நடத்தினர்.
அப்படி மலர்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு முன்பாகச் சில சுற்றுலாப் பயணிகள் தம்படம் எடுத்துக் கொண்டது பலரைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.