புதுடெல்லி, ஏப்ரல் 20 – காங்கிரசுக்கு பதிலடி தரும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்காகவும், ஏழைகளுக்காவும் பாஜக அரசு பாடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு கொள்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது; “ஏழைகள், விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு எத்தனையோ திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது”.
“இதுகுறித்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். நம்முடைய அரசு செய்து வருவதையும் முந்தைய அரசு செய்ததையும் வேறுபடுத்திக் காட்டவேண்டும்”.
“மழை காரணமாக 50 சதவீத பயிர் சேதம் ஏற்பட்டால்தான் விவசாயிகளுக்கு இழப்பீடு என்ற நிபந்தனையை தளர்த்தி, 33 சதவீதம் சேதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது”.
“நான் எடுக்கும் எல்லா முடிவுகளும் ஏழைகள் நலனுக்கானவை. ஏழைகளுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பாடுபடுகிறது இந்த அரசு. செய்தியில் வர வேண்டும் என்பதற்காக அல்ல. உண்மையில் அவர்களுக்கு நன்மை செய்யாவிட்டால் நிம்மதியான உறக்கம் வருவதில்லை”.
“நாங்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பது ஏழைகள் நலனுக்காக, அதிகாரத்தை அனுபவிப்பதற்காக அல்ல. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக பணவீக்கம் குறைந்தது, சிமென்ட் விலை குறைந்தது. இதனால் ஏழைகள் பலன் அடைந்துள்ளனர்”.
“சிலருக்கு பாஜகவை குறை கூறுவதுதான் பிறவி குணம். குறை சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை என சொல்லமாட்டேன். ஆனால் தாங்கள் நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ள அவர்களுக்கு உரிமை இல்லை. மத்திய அரசின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது”.
“நம் நாடு வேகமாக வளர்வதாக அமெரிக்க அதிபர், உலக வங்கி தலைவர்கள் உள்ளிட்டோர் ஒப்புக் கொண்டுள்ளனர்” என்றார் மோடி. இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் பிரதமர் அருகே மேடையில் அமர்ந்திருந்தனர்.