புதுடெல்லி, ஏப்ரல் 27 – சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தில் இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ள நிலையில், இதுபோன்ற பயங்கர பூகம்பம் அடுத்து இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவில் இத்தகைய பூகம்பம் ஏற்படும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
“நேபாளத்தில் ஏற்பட்டது போன்ற அதே அளவிலான பூகம்பம் ஏற்படக்கூடும். இது இன்றோ அல்லது அடுத்த 50 வருடங்களிலோ ஏற்படலாம். காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தர்கண்ட் மாநிலங்களையொட்டிய இமயமலைப் பகுதியில் இப்பூகம்பம் ஏற்படலாம்” என்கிறார் அகமதாபாத்தை சேர்ந்த நில மற்றும் நில அதிர்வு ஆய்வாளர் பி.கே.ரஸ்தோகி.
இத்தகைய பூகம்பங்கள் இமய மலைப் பகுதியில் ஏற்படுவதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார்.
பூமிக்கு கீழே நில அடுக்குகளுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய அழுத்தம் காரணமாக அதன் உயர்மட்டத்தில் உள்ள பாறைகள் வெடித்துச் சிதறுகின்றன. இமய மலைத் தொடரின் சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியில், ஒவ்வொரு நூறு கிலோமீட்டருக்கும் இடையே ஏற்படக்கூடிய இத்தகைய அழுத்தங்கள் ஒன்றுசேரும் போது, அம்மலைத் தொடரில் பெரிய பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்பதே ரஸ்தோகியின் கூற்று.
“இத்தகைய நில அழுத்தம் பல இடங்களிலும் ஏற்படுகிறது. அதன் உச்ச முடிவு எங்கு இருக்கிறது, எப்போது முடிவடைகிறது என்பது தெரியாது. ஆனால் எல்லா இடங்களிலும் இவ்வாறு ஏற்படுகிறது என்பது மட்டுமே நமக்குத் தெரிய வருகிறது.
“இமய மலைத் தொடரில் 20 பகுதிகளில் இத்தகைய கடும் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தளவு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட 200 ஆண்டுகள் ஆகும். இம்முறை நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் கடைசியாக கடந்த 1833ஆம் ஆண்டு, காத்மாண்டுவுக்கு வட மேற்கே 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
“சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இமய மலையிலிருந்து தெற்கே 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இந்தியா இருந்தது. ஆனால் பருவ மாற்றங்கள் காரணமாக இந்தியாவும் ஆசிய கண்டமும் இமய மலை அருகே நகர்ந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 2 சென்டிமீட்டர் தூரம் இந்த நகர்தல் நிகழ்கிறது. இதன் காரணமாக இமய மலையின் நில அடுக்குகளில் அழுத்தம் ஏற்படுகிறது,” என்கிறார் ரஸ்தோகி.
ரஸ்தோகி போன்றே, மேலும் சில நிபுணர்களும் இதே ரீதியிலான அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.