ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் கடந்த மாதம், அனைத்துலக விண்வெளி மையத்திற்கு, சரக்கு விண்கலம் ஒன்று ரஷ்ய விஞ்ஞானிகளால் அனுப்பப்பட்டது.
பூமிக்கு மேலே அனைத்துலக விண்வெளி மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும் 6 வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும், நீர், ஆக்ஸிஜன் மற்றும் சில உபகரணங்களையும் எடுத்துச் சென்ற அந்த விண்கலம், விண்வெளியை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீர் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது.
எனவே, மீண்டும் அது பூமியை நோக்கி விழுந்து கொண்டிருப்பதாகவும், எந்நேரத்திலும் அந்த விண்கலம் பூமியைத் தாக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அந்த விண்கலம் இன்று அதிகாலை 1.23 மணி முதல் இரவு 9.55 மணிக்குள் பூமியில் விழும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள், இவ்வாறு கட்டுப்பாட்டை இழக்கும் விண்கலங்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தவுடன் முழுவதுமாக எரிந்துவிடும். அதனால், விண்கலம் பூமியைத் தாக்கும் என்பன போன்ற கற்பனைகளை நினைத்து கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.