காட்மாண்டு, மே 8 – நேபாளத்தில் நிலநடுக்கம் தாக்கி இரு வாரங்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையிலும், இடிபாடுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ள நிலையில், மலேசியாவின் விருது பெற்ற ‘டிஜே’ (DJ) சாய் ஜெயராஜ் ஆண்டனியின் உடல் சமீபத்தில் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காட்மாண்டுவில் இருந்து 130 கி.மீ தொலைவில் இருக்கும் லாங்டாங் பள்ளத்தாக்கில், அவரது கடவுச்சீட்டுடன் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த லாங்டாங் பள்ளத்தாக்கு தான் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி என்று கூறப்படுகிறது. மீட்கப்பட்டது சாய் தானா என்பதை உறுதி செய்ய அவரின் சகோதரர் காத்மாண்டுவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
6 மாத விடுமுறையை இந்தியாவில் செலவழித்த சாய் ஜெயராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நேபாளம் சென்றிருக்கிறார். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே, அவருடனான அழைபேசி தொடர்புகள் அனைத்தும் நின்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
மேலும் அவர், தனது பேஸ்புக் பதிவில் இறுதியாக, 21-28-ம் தேதி வரை மலையேற்றத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர், நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இது தொடர்பாக மலேசிய தூதரக அதிகாரி ஃபேட்லி அடில்லாஹ் கூறுகையில், “இறந்தவரின் உடலை மலேசியாவிற்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து உதவிகளையும் மலேசிய தூதரகம் கவனித்துக் கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.